காத்மாண்டு: இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு தடைவிதிக்கவில்லை என்று நேபாள அரசு கூறியுள்ளது.
அதிகப்படியான பூச்சிக்கொல்லிப் பயன்பாடு மற்றும் எல்லைப் பகுதிகளில் சோதனை வசதிகள் இல்லாததால் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.
குறிப்பாக, பூச்சிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இந்திய மாம்பழ லாரிகள் சில நாட்களுக்கு முன்பு மாதேஷ்மாகாண எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டன. எனினும், இந்திய அதிகாரிகளிடமிருந்து தாவர ஆரோக்கிய சான்றிதழ் பெறப்பட்டதை அடுத்து, அவை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்திய மாம்பழ இறக்குமதியை நிறுத்தினால் உள்நாட்டு சந்தையில் பற்றாக்குறை ஏற்படும் என்று ஜனக்பூர்தாமில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் புவனேஸ்வர் பூர்பே எச்சரித்திருந்தார். ஜனக்பூர்தாமுக்கு 50 டன்னுக்கும் அதிகமான மாம்பழங்கள் வந்தாலும், நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் உற்பத்தி மட்டுமே போதாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேபாள வேளாண்மை, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. சில விதிமுறைகளின்படி தேவையின் அடிப்படையில் நேபாள சந்தைக்குள் மாம்பழங்கள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்கள் நுழைவதைத் தடுக்க, உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்திய மாம்பழங்களை 48 டிகிரி செல்சியஸ் வெந்நீரில் ஒரு மணி நேரம் வைப்பது போன்ற சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நேபாள அமைச்சகம் தெரிவித்துள்ளது.