சென்னை: நீட் மறுதேர்வு காரணமாக இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டடது. இந்நிலையில், இந்த தடைக் காலம் முடிந்த நிலையில் மீண்டும் பயனர்களின் பயன்பாட்டுக்கு இந்த செயலி வந்துள்ளது.
நீட் மறுதேர்வை முன்னிட்டு ஜூன் 22 வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் செயலி நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அரசின் தற்காலிக தடை உத்தரவு செல்லும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில், ஜூன் 16 முதல் 22-ம் தேதி வரையிலான ஒரு வார கால தடையைத் தொடர்ந்து டெலிகிராம் செயலி இந்தியாவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. ஸ்மார்ட்போன்களில் டெலிகிராம் செயலியை டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்ய முடிவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இந்தச் செயலியை இப்போது டவுன்லோட் செய்ய முடிகிறது.
மேலும், இந்தச் செயலி மூலம் மல்டி மீடியா மெசேஜ்களை அனுப்ப முடிவதாகவும், அது அனுப்பும் நபர்களுக்கு டெலிவரி ஆவதாகவும் பயனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், டெலிகிராம் செயலியின் இயக்கம் வழக்கமான பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பயனர்களில் சிலர் தங்களால் டெலிகிராம் செயலியில் சாட்களை அக்சஸ் செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். சில பயனர்கள் தங்களால் டெலிகிராம் செயலிக்குள் லாக்-இன் செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளனர். செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் இந்த நிலை நீடிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட தனியார் டெலிகாம் சேவையை பயன்படுத்தும் பயனர்கள் சிலரும், தங்களால் டெலிகிராம் செயலியை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் டெலிகிராம் செயலியின் பயன்பாடு இந்தியாவில் மெல்ல திரும்புவதை அறிந்து கொள்ள முடிகிறது.