வணிகம்

தூத்​துக்​குடி​யில் 25,000 ஏக்​கரில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: 25 லட்சம் டன்​ உப்பு உற்பத்திக்கு இலக்கு

ரெ.ஜாய்சன்

தூத்​துக்​குடி: தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் நடப்பு ஆண்டு 25 லட்​சம் டன் உப்பு உற்​பத்தி என்ற இலக்கை குறி​வைத்து 25 ஆயிரம் ஏக்​கர் உப்​பளங்​களை தயார்​படுத்​தும் பணி​கள் தொடங்கி உள்​ளன.

நாட்​டின் உப்பு உற்​பத்​தி​யில் குஜ​ராத்​துக்கு அடுத்​தப்​படி​யாக தூத்​துக்​குடி மாவட்​டம் 2-ம் இடத்​தில் உள்​ளது. அம்​மாவட்​டத்​தில் வேம்​பார், தூத்​துக்​குடி, முத்​தை​யாபுரம், முள்​ளக்​காடு, ஆறு​முகநேரி பகு​தி​களில் 25 ஆயிரம் ஏக்​கரில் உப்​பளங்​கள் உள்​ளன. இவற்​றில் சுமார் 50 ஆயிரம் தொழிலா​ளர்​கள் வேலை செய்​கின்​றனர்.

          

ஜனவரி மாதம் உப்பு உற்​பத்​திக்​கான பணி​கள் தொடங்​கும். ஏப்ரல் முதல் செப்​டம்​பர் வரையி​லான 6 மாதங்​கள்​தான் உப்பு உற்​பத்​திக்கு உகந்த காலம். அக்​டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்​கியதும் உப்பு சீஸன் முடிவடை​யும். ஆண்டுக்கு சராசரி​யாக 25 லட்​சம் டன் உப்பு உற்​பத்தி செய்யப்படு​வது வழக்​கம். ஆனால், கடந்த ஆண்டு சுமார் 19 லட்சம் டன் உப்பு மட்​டுமே உற்​பத்​தி​யானது.

குறை​வாக உற்​பத்தி செய்​யப்​பட்​டாலும் தமிழகத்​தில் உப்பு விலை உயர​வில்​லை. இந்​நிலை​யில், கடந்த 19-ம் தேதி தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை வில​கியது. இதைத் தொடர்ந்​து, தூத்துக்குடி மாவட்​டத்​தில் உள்ள 25 ஆயிரம் ஏக்​கர் உப்பளங்களையும் சீரமைக்​கும் பணி​கள் தீவிரமடைந்​துள்​ளன. கடந்த ஒரு மாத​மாகவே மழை பெய்​ய​வில்​லை.

இதனால், உப்​பளங்​களில் தேங்​கி​யிருந்த ஜிப்​சத்தை அகற்​றும் பணியை தொழிலா​ளர்​கள் மேற்​கொண்​டனர். தற்​போது, உப்​பளங்​களில் குவிந்​துள்ள மணல் குவியல்​களை அகற்​று​தல், கரைகளை சீரமைத்​தல், ஆழ்​துளைக் கிணறுகளை சரி செய்​தல், பாத்​தி​களில் உப்​புநீர் நிரப்​புதல் போன்ற பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

இப்​பணி​கள் முடிவடைந்து உப்பு உற்​பத்தி தொடங்​கு​வதற்கு மார்ச் மாத​மாகி​விடும். எனவே, நடப்​பாண்டு மார்ச் முதல் வாரத்​திலேயே உப்பு உற்​பத்தி முழு அளவில் தொடங்​கும் என எதிர்​பார்க்​கப் ​படு​கிறது. கடந்த ஆண்டு உப்பு உற்​பத்தி குறைந்த நிலை​யில், இந்த ஆண்டு எப்​படி இருக்​கும் என்​பது வரும் மாதங்​களில் நில​வும் வானிலை​யைப் பொறுத்தே அமை​யும்​ என உற்​பத்​தி​யாளர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT