கோப்புப் படம்

 
வணிகம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி; பங்குச் சந்தையில் ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் ஐந்தாவது வாரமாக நீடிப்பதன் விளைவாக, உலக அளவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 1,635 புள்ளிகள் (2.22%) சரிந்து 71,947.55-ல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 488 புள்ளிகள் (2.14%) வீழ்ச்சியடைந்து 22,331.40-ல் முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.422 லட்சம் கோடியில் இருந்து ரூ.412.4 லட்சம் கோடியாகக் குறைந்தது. இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

          

இதனிடையே, அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 95-க்கும் அதிகமாக சரிந்தது. ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பு 95.20-ஆக வீழ்ச்சியடைந்தது. வங்கிகளின் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலவரங்களை ரிசர்வ் வங்கி முறைப்படுத்திய போதிலும், ரூபாயின் சரிவைத் தடுக்க இயலவில்லை.

ஈரான் மீதான தாக்குதல் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 115.98 டாலராக உயர்ந்துள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இது 70 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போர் நீண்ட காலம் நீடிக்கும் பட்சத்தில், அது ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவு பாதிக்கும் என்பது சர்வதேச நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

SCROLL FOR NEXT