மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி சென்செக்ஸ் 81,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்களின் வருகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
அந்த வகையில் தொடர்ந்து 7-வது நாளாக நேற்று இந்தியப் பங்குச்சந்தை அசுர வளர்ச்சியைப் பதிவு செய்தது. அந்த வகையில் சென்செக்ஸ் 1,718.01 புள்ளிகள் அதிகரித்து 81,082.02 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 493.75 புள்ளிகள் உயர்ந்து 25,030.35 புள்ளிகளில் நிலைகொண்டது.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், பவர் கிரிட் மட்டுமே சரிவைச் சந்தித்தது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டைட்டன், ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட ஏனைய 29 நிறுவனப் பங்குகள் லாபத்தை பதிவு செய்தன.
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத்தேர்தல் முடிவுகளுக்குப் பின், உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் ஏஐ பங்குகளில் சரிவு ஏற்பட்டது. இதனால் உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்களின் பார்வையை பாதுகாப்பான இந்தியப் பெரு நிறுவனங்களின் பங்குகள் பக்கம் திருப்பியுள்ளனர்.
தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை வாங்குவதை அதிகரித்துள்ளனர். இதன்மூலம் ரூ.14,975 கோடி கொள்முதல் பதிவாகியுள்ளது. உலகளாவிய முதலீட்டாளர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான வர்த்தகங்களிலிருந்து தங்கள் பணத்தை மாற்றியதால், பல ஆண்டுகளில் இது அவர்களின் மிகப்பெரிய ஒற்றை நாள் நிகர முதலீடாகும்.