வணிகம்

ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை: மேற்காசிய போர் தணியும் என நம்பிக்கை!

நிதி ஆண்டின் முதல் நாளில் நேர்மறையாக நிறைவடைந்த வர்த்தகம்

மோகன் கணபதி

மும்பை: 2026-27-ம் நிதி ஆண்டின் முதல் நாளான இன்று (ஏப்.1), இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 1.65% உயர்ந்தும், நிப்டி 1.56% உயர்ந்தும் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அமெரிக்​கா - இஸ்​ரேல் மற்​றும் ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள போர் காரண​மாக இந்தியப் பங்குச் சந்தைகள் கடந்த மார்ச் மாதத்​தில் கடும் வீழ்ச்சியை சந்​தித்​தன. தொடர்ந்து 5 வாரங்​களாக சரிவை எதிர்​கொண்ட பங்​குச் சந்​தை, முதலீட்டாளர்​களுக்​குப் பேரிழப்பை ஏற்​படுத்​தி​யது.

பிஎஸ்​இ-​யில் பட்​டியலிடப்​பட்ட நிறு​வனங்​களின் மொத்த சந்தை மதிப்பு மார்ச் மாதத்​தில் ரூ.463 லட்​சம் கோடி​யில் இருந்து ரூ.412 லட்​சம் கோடி​யாகச் சரிந்​தது. இதன் மூலம் ஒரு மாதத்​தில் மட்​டும் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.51 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்​டாளர்​கள் கடந்த மார்ச் மாதத்​தில் மட்டும் சுமார் ரூ.1.2 லட்​சம் கோடி மதிப்​பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்​பப் பெற்​றனர். இது முன்​னெப்​போதும் இல்​லாத அளவி​லான மிகப்​பெரிய எப்ஐஐ வெளி​யேற்​றமாக இருந்தது.

          

இந்நிலையில், 2026-27ம் நிதி ஆண்டின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் குறியீடு 1,186.77 புள்ளிகள் (1.65%) உயர்ந்து 73,134.32 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 50 குறியீடு 348 புள்ளிகள் (1.56%) உயர்ந்து 22,679.40 ஆக முடிவடைந்தது. இதன்மூலம், பங்குச் சந்தை இன்றைய வர்த்தகத்தை நேர்மறையான முறையில் தொடங்கியுள்ளது.

வங்கி, ஊடகம், ரசாயனம் உலோகத் துறைகளைச் சேர்ந்த பங்குகள் உயர்ந்தன. குறிப்பாக, Sensex-இல் இடம்பெற்றுள்ள Trent, InterGlobe Aviation, Adani Ports, Bharat Electronics, State Bank of India, Eternal ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக லாபம் ஈட்டின. அதேநேரத்தில், NTPC, Sun Pharma, Power Grid, UltraTech Cement, Bharti Airtel ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பின்தங்கிய நிலையில் இருந்தன.

ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரை, தென்கொரியாவின் Kospi, ஜப்பானின் Nikkei 225, ஷாங்காயின் SSE Composite, ஹாங்காங்கின் Hang Seng ஆகிய குறியீடுகள் கணிசமான ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இதில் Kospi குறியீடு 8.44 சதவீதமும், Nikkei 225 குறியீடு 5.24 சதவீதமும் உயர்ந்தன. ஐரோப்பியச் சந்தைகளும் நேர்மறையான நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தன.

சர்வதேச சந்தையில் Brent கச்சா எண்ணெயின் விலை இன்று 0.22 சதவீதம் சரிந்து ஒரு பேரலுக்கு 103.7 டாலர் என்ற நிலையில் இருந்தது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் சந்தை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தியது.

பங்குச் சந்தை தரவுகளின்படி, திங்களன்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) 11,163.06 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். அதேவேளையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (DIIs) 14,894.72 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT