சென்னை: தெற்கு ரயில்வேக்கு கடந்த 2025-26-ம் நிதியாண்டில், பயணிகள் பிரிவில் ரூ.8,269.09 கோடி, சரக்கு பிரிவில் ரூ.3,841.11 கோடி என மொத்தம் ரூ.12,110 வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு ரயில்வே கடந்த நிதியாண்டில் (2025-26) அனைத்து துறைகளிலும் சிறப்பான செயல்பாடுகளுடன் பணியாற்றியுள்ளது. பயணிகள் ரயில்கள் இயக்கம் பிரிவில் ரூ.8,269.09 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இது, முந்தைய ஆண்டைய ஒப்பிடுகையில் 9.7 சதவீதம் அதிகமாகும். ரயில்வே வாரியம் நிர்ணயித்த ஆண்டு இலக்கான ரூ.8,119.32 கோடியைவிட 1.8 சதவீதம் அதிகமாகும்.
மேலும் தெற்கு ரயில்வேயில் இதுவரை இல்லாத அளவுக்கு டிக்கெட் பரிசோதனை வாயிலாக ரூ.160.75 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.129.82 கோடியாக இருந்தது. இதன்படி இது 30.93 சதவீதம் அதிகமாகும். அதேபோல் சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில் ரூ.3,841 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 0.9 சதவீதம் வளர்ச்சியாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.