வணிகம்

ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகிறதா தங்கம்? - விலை உச்சமும் வியாபாரிகள் ஆதங்கமும்

ஒய்.டேவிட் ராஜா

மதுரை: தங்கம் விலை ஒரு பவுன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியதால் ஏழை மக்கள் இனி தங்கம் வாங்க முடியாதோ என்ற ஏக்கத்தில் உள்ளனர். விற்பனைக் குறைவால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தங்க நகைகள் அழகு, அந்தஸ்து, கலாச்சார முக்கியத்துவம், பாரம்பரிய முதலீடு என பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக மக்கள் மதிக்கின்றனர்.

தற்போது தங்கம் விலை பவுனுக்கு ரூ. ஒரு லட்சத்தை தாண்டியதால் மக்கள் மத்தியில் இனி தங்கம் நம்மால் வாங்க முடியுமா? என்ற ஒருவித அச்ச உணர்வையும், நகை தயாரிப்பாளர்கள் மத்தியில் விற்பனை குறைவால் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரம் காரணமாக இந்த விலை உயர்வு காணப்பட்டாலும், சாமானிய, நடுத்தர மக்களுக்கும் சிறிய நகை வியாபாரிகள், நகை உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கும் பாதிப்பாகவே கருதப்படுகிறது.

ஒத்தக்கடையைச் சேர்ந்த லோகேஸ்வரி: எனது மகளுக்கு திருமணத்துக்காக நகைகள் வாங்குவதற்காக வந்தோம். தங்கம் வாங்க பணம் சேர்த்து வைத்திருந்தோம். கடந்த ஆண்டே வாங்கியிருந்தால் இருமடங்கு அதிகமாக நகைகளை வாங்கியிருக்கலாம். விலை அதிகரித்ததால் குறைவான எடையில் நகைவாங்க வேண்டிய நிலை உள்ளது.

எங்களைப் போன்ற நடுத்தர குடும்பத்தினருக்கு இந்த விலை உயர்வு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் உள்ளது என்றார்.

மதுரை நேதாஜி சாலையில் நகைக் கடை வைத்திருக்கும் சபரிநாதன்: தங்கம் விலை நிகழாண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், கடைக்கு வரும் மக்கள் கூட்டம் குறையவில்லை. மாறாக, அவர்கள் வாங்கும் அளவு குறைந்துள்ளது. எடை குறைந்த, அதேபோன்று பெரிதாக தோற்றமளிக்கும் நகைகளை வாங்குவோர் அதிகரித்துள்ளனர் என்றார்.

மதுரை தெற்குமாசி வீதியைச் சேர்ந்த மணிகண்டன்: நாங்கள் மூன்று தலைமுறைகளாக நகைக்கடை வைத்துள்ளோம். தற்போது எனது வாரிசுகள் இந்தத் தொழிலுக்கு வருவதற்குத் தயங்குகின்றனர்.

காரணம் விலையேற்றம் காரணமாக வழக்கமாக வரும் மக்கள்கூட பெரிய கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்கிச் செல் கின்றனர். விலை உயர்வு காரண மாக 18 காரட் அல்லது கவரிங் நகைகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் கொண்டுள்ளதால் எங்கள் விற்பனை பெரிதும் குறைந்துள்ளது.

நகை உற்பத்தியாளர் அழகேசன்: விலை உயர்வு காரணமாக ஆர்டர்கள் குறைந்துள்ளன. நகை உற்பத்தியாளர்கள் பெரிதும் நலிவடைந்துள்ளனர். முன்பெல்லாம் பணம் சேமித்து வைத்து தங்கம் வாங்கினர். அதனை ஒரு மூலதனமாகவும், கவுரவமாகவும் கருதினர்.

சிறிய வீடாக இருந்தாலும், அவர்களிடம் தங்கம் அதிகமாக இருக்கும். தற்போது தங்கம் விலை உயர்வு காரணமாக தங்கம் வாங்கிச் சேமிக்கும் பழக்கம் மெல்லக் குறைந்து கடனுக்கு, ஆடம்பரப் பொருட்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT