வணிகம்

மழை காரணமாக உற்பத்தி பாதிப்பு: சின்ன வெங்காயம் கிலோ ரூ.210 ஆக உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: வரத்துக் குறைவு மற்றும் தொடர் மழை காரணமாக சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்து, ஒரு கிலோ ரூ.210-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிராவிலும் பெய்த மழையால் சின்ன வெங்காய விளைச்சல் மற்றும் அறுவடை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தைக்கு தினமும் 20 லாரிகளில் சின்ன வெங்காயம் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அது 10 முதல் 12 லாரிகளாகக் குறைந்துவிட்டன.

கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.150 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது தரத்துக்கு ஏற்ப ரூ.180 வரை விற்பனையாகிறது. சில்லறை கடைகளில் ரூ.210-க்கும், சென்னையின் புறநகர் மற்றும் வெளி மார்க்கெட் ரூ.210 முதல் ரூ.250 வரையிலும் விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் கூறியதாவது: அன்றாட சமையலுக்கு அத்தியாவசியமான சின்ன வெங்காயம் இரட்டை சதம் அடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைவு மற்றும் மழையின் காரணமாக இந்த விலை உயர்வை எட்டியுள்ளது.

சின்ன வெங்காயம் மட்டுமின்றி, பெரிய வெங்காயம், பீன்ஸ், நைஸ் கொத்தவரங்காய், உஜாலா கத்தரிக்காய், பன்னீர் பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன.

சின்ன வெங்காயம் ரூ.210-ஐ கடந்துள்ளதால், பொதுமக்கள் சின்ன வெங்காயம் வாங்குவதைக் குறைத்துக் கொண்டுள்ளனர். இதனால் சரக்குகள் தேங்கி விற்பனையாகாமல் உள்ளன. மழை நின்று, புதிய அறுவடைப் பயிர்கள் சந்தைக்குவர இன்னும் சில வாரங்களாகும்.

அதுவரை விலை குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். விலையேற்றம் குறித்து இல்லதரசிகளிடம் கேட்டபோது, ‘‘சின்ன வெங்காயத்தின் விலையைக் கேட்டு வாங்கவே பயமாக உள்ளது.

இதனால் சாம்பார், காரக்குழம்பு போன்ற உணவுகளில் சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விட்டோம். முன்பு ரூ.100-க்கு ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிவிட முடியும்.

ஆனால் இப்போது அரைகிலோ சின்ன வெங்காயம் வாங்கவே ரூ.100-க்கும் மேல் செலவாகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT