வணிகம்

ட்ரம்ப் அறிவிப்பின் தாக்கம்: சென்செக்ஸ் 1,677 புள்ளிகள் வீழ்ச்சி!

செய்திப்பிரிவு

மும்பை: “ஈரானுடனான போர் நிறுத்தம் நிறைவு பெறுகிறது” என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பின் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் புதன்கிழமை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 1,677.12 புள்ளிகள் சரிந்து 76,503.60 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 516.65 புள்ளிகள் சரிந்து 23,882.05 ஆகவும் நிலை கொண்டது.

இன்றைய வர்த்தகத்தில் ஏறக்குறைய அனைத்து நிறுவனப் பங்குகளின் மதிப்பும் கடும் வீழ்ச்சி கண்டன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதாவது, ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானில் சமீப காலமாக அமைதி நிலவி வந்தச் சூழலில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகமும் சீரடைந்து வந்தது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த இரு தினங்களாக நல்ல ஏற்றம் நிலவி வந்த சூழலில், இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் வலுத்துள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 76 டாலராக அதிகரித்தது. இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் அதிரடி அறிவிப்பும் ஆசிய மற்றும் இந்திய பங்குச் சந்தைகளில் பாதகப் போக்குக்கு வித்திட்டுள்ளது.

“ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் என்னை பொறுத்தவரை நிறைவுற்றது. ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறார்கள். பின்னர் பொதுவெளியில் அவற்றை மறுக்கிறார்கள். இனி, நேர்மையான முறையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நான் நம்பவில்லை. அவர்கள் பொய்யர்கள். ஈரானுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க தரப்பு தொடர்ந்து நடத்தலாம். ஆனால், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், மனநிலை சரியில்லாதவர்கள்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 3 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் தளங்கள், புரட்சிகர காவலர் கப்பல்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகளை அமெரிக்கப் படைகள் தாக்கின.

மேலும், ஈரான் எண்ணெய் விற்பனையை செய்வதற்கான அனுமதியையும் அமெரிக்கா ரத்து செய்தது. அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது. மீண்டும் தொடங்கி இருக்கும் இந்த மோதல், மேலும் விரிவடைந்து கச்சா எண்ணெய் விலை இன்னும் கடுமையாக உயர வழிவகுக்குமோ என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலவரத் தாக்கம்தான் இந்திய பங்குச் சந்தையில் இன்று எதிரொலித்துள்ளது. இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் 95.56 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT