மும்பை: சர்வதேச சந்தைகளில் நிலவிய சாதகமான சூழலால், இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டன.
மேற்கு ஆசிய போர்ப் பதற்றத்தால் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், நேற்று வர்த்தக முடிவில் 899.71 புள்ளிகள் (1.14%) உயர்ந்து 80,015.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, மூன்று நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து 285.40 புள்ளிகள் (1.17%) அதிகரித்து 24,765.90-ல் நிலைகொண்டது.
சென்செக்ஸ் பட்டியலில் அதானி போர்ட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், இண்டர்குளோப் ஏவியேஷன் ஆகிய நிறுவனப் பங்குகள் கணிசமாக உயர்ந்தன. இதன்மூலம் முதலீட்டாளருக்கு ரூ.6 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 83 டாலரை தாண்டி உள்ளது.