மும்பை: மேற்கு ஆசியாவில் நிலவிய போர் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று ஒரே நாளில் 2,946 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 77,562 புள்ளிகளில் நிலைபெற்றது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 'நிஃப்டி' 873 புள்ளிகள் அதிகரித்து 23,997-ல் நிலைகொண்டது. இந்த உயர்வால், ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.17 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்தது.
இதனிடையே போர் பதற்றம் தணிந்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 14 சதவீதம் குறைந்து, ஒரு பேரல் 100 டாலருக்கும் கீழ் குறைந்து 94 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. இது இந்தியாவைப் போன்ற இறக்குமதியைச் சார்ந்த நாடுகளுக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் லாபத்துடன் வர்த்தகமாகின. ஜப்பானின் நிக்கி மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி சந்தைகள் 5 முதல் 6% வரை உயர்ந்தன.