வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் மீண்டும் வீழ்ச்சி: ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

மும்பை: ஈரான் போரின் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தைகளில் இன்று மீண்டும் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் போர் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதல்களின் காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. எனினும் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டன. ஆனால் இன்று மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று வர்த்தக முடிவில் 1,097 புள்ளிகள் சரிந்து 78,918 ஆக நிலைபெற்றது. இது கடந்த 10 மாதங்களில் அதிகபட்ச சரிவு ஆகும்.

          

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 315 புள்ளிகள் சரிந்து 24,450 ஆக நிலைபெற்றது. இது கடந்த 6 மாதங்களில் அதிகபட்ச சரிவு ஆகும். இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பங்குச் சந்தை நிபுணர்கள் கூறும்போது, “அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் போர், முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை வெளியேற்றி வருகின்றன. போர் காரணமாக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி காணப்படுகிறது. இது இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT