மும்பை: உலகளாவிய சந்தைகளின் பலவீனமான போக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் கடுமையான வீழ்ச்சி காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்தன.
மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ் ஒரே நாளில் 893 புள்ளிகள் வரை சரிந்து, 76,200 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 278 புள்ளிகள் குறைந்து 23,824 புள்ளிகளாக சரிந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட இந்த திடீர் வீழ்ச்சியால், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பில் சுமார் ரூ.4.61 லட்சம் கோடி ஒரே நாளில் துடைத்தெறியப்பட்டது.
கடந்த வாரம் சரிவைக் கண்டு திங்கள்கிழமை மீண்டெழுந்த ஐடி பங்குகள், நேற்று மீண்டும் கடுமையான விற்பனை அழுத்தத்திற்கு உள்ளாகின. முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 3 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்தன.
உலகளாவிய நிறுவனங்களின் மென்பொருள் செலவினக் குறைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஐடி துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்த கவலைகளே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
மேலும், ஆசிய பங்குச்சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கரடியின் பிடியில் சிக்கியது. குறிப்பாக, தென் கொரியாவின் முதன்மை பங்குச்சந்தைக் குறியீடான கோஸ்பி சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்தது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் 13% வரையும், எஸ்கே ஹைனிக்ஸ் 12% வரையும் சரிந்தன.
சந்தை மிகக் குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் தங்களின் லாபத்தை பதிவு செய்ய முற்பட்டனர். இந்த சரிவால் தென் கொரிய சந்தையில் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்தும் ‘சர்க்யூட் பிரேக்கர்' நடைமுறைப்படுத்தப்பட்டு, 20 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.