புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தலைவர் சி.எஸ்.ஷெட்டி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த 2024-25 நிதியாண்டின் முடிவில் எஸ்பிஐ வழங்கியுள்ள ஒட்டுமொத்த வீட்டுக் கடன் ரூ.8.31 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 14.4% அதிகம். இப்போது இது ரூ.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் ஒட்டுமொத்த கடனில் இது 20% ஆகும்.
கடன் வளர்ச்சியை 12%-லிருந்து 14% ஆக அதிகரித்துள்ளோம். அடுத்த நிதியாண்டில் வீட்டுக் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.எஸ்பிஐ வங்கியின் வீட்டுக் கடன் அளவு கடந்த 2011 மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து இப்போது (நவம்பர்) ரூ.9 லட்சம் கோடியாகி உள்ளது. சில்லறை, வேளாண்மை,எம்எஸ்எம்இ துறைக்கான கடன் கடந்த செப்டம்பரில் ரூ.25 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.
இது ஒட்டுமொத்த கடனில் 67% பங்கு வகிக்கிறது. மேலும் இவ்வங்கியின் வாராக் கடன் அளவும் 1 சதவீதத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. குறிப்பாக வீட்டுக் கடன் பிரிவில் வாராக் கடன் அளவு 0.72% ஆக உள்ளது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு ஆகும்.