புதுடெல்லி: இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை பெற அனுமதி கோரி மூன்று நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில், எலான் மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனமே கடைசியாக விண்ணப்பித்ததாகவும், பாதுகாப்புத் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்ததில் அதுவே கடைசி என்றும் மத்தியஅரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கு சில தொழிலதிபர்கள் முட்டுக்கட்டை போடுவதாக எலான் மாஸ்க் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இணைய சேவைக்கு யார் வந்தாலும் இந்தியா வரவேற்கிறது என்று கூறப்பட்டுள்ளது. சேவையின் விலை, தரம் மற்றும் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களே தங்களுக்கு விருப்பமான நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஜியோ, ஒன்வெப் மற்றும் ஸ்டார்லிங்க் ஆகிய மூன்று நிறுவனங்களில், ஸ்டார்லிங்க் தாமதமாக விண்ணப்பித்து உரிமம் பெற்ற போதிலும், மூன்று நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டு விட்டன. இந்த விண்ணப்ப செயல்முறைகள் அனைத்தும் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றுள்ளன. வணிகரீதியான சேவையைத் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து நிறுவனங்களும் தங்கள் தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகளையும் பாதுகாப்பு விதிகளையும் பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பார்தி ஏர்டெல் ஆதரவு பெற்ற ‘ஒன்வெப்’ நிறுவனம் முதலிலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஜியோ’ இரண்டாவதாகவும், மஸ்கின் ‘ஸ்டார்லிங்க்’ மூன்றாவதாகவும் பாதுகாப்பு இணக்க ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளன. அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் அதன் விலை நிர்ணயம் குறித்து மத்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்ட பிறகே சேவைகள் முழுமையாகத் தொடங்கப்படும் என்றும், அது ஒட்டுமொத்தத் துறைக்கும் பயனளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.