வணிகம்

‘சமுத்ரா மந்தன்’ திட்டம் என்றால் என்ன? - ரூ.84,000 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு

போத்தி ராஜ்.க

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2015-16 நிதியாண்டில் 36.9 மில்லியன் டன்னாக இருந்த உற்பத்தி, 2024-25 நிதியாண்டில் 28.7 மில்லியன் டன்னாகக் குறைந்தது.

நாம் பயன்படுத்தும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் 88.7 சதவீதத்தை இறக்குமதி மூலமே நிறைவு செய்கிறோம். அதாவது, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு 10 பீப்பாய் எண்ணெயிலும் 9 பேரல்கள் இறக்குமதி செய்யப்படுபவையாகும். இதனால்தான், சர்வதேச நிகழ்வுகள், விலை மாற்றம் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்படும் பாதிப்புகளால் இந்தியப் பொருளாதாரம் எளிதில் பலவீனமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்காகவே, ஆழ்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கண்டறியும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் சிறப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

‘சமுத்ரா மந்தன்’ என்றால் என்ன?

‘சமுத்ரா மந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு ரூ.84,084 கோடியை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் லட்சிய இலக்கான ஆழ்கடல் (Deepwater) மற்றும் அதி ஆழ்கடல் (Ultra-Deepwater) ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இத்திட்டம் அமையும் என நம்பப்படுகிறது.

பொதுவாக ஆழ்கடல் மற்றும் அதிஆழ்கடல் ஆய்வுகளும், எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களும் மிகுந்த சவால்கள் நிறைந்தவை. அதிக முதலீடு செய்து ஆய்வு மேற்கொண்டும் வணிக ரீதியாக எதுவும் கிடைக்காவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால், இதில் தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் முதலீடு செய்வதில்லை.

அதற்குப் பதிலாக ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் கிணறுகளில் முதலீடு செய்து உற்பத்தியைப் பெருக்கவே தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. இந்த நிலையை மாற்றி ஆய்வுகளில் தோல்வி ஏற்பட்டாலோ அல்லது எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்காமல் போனாலோ தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைப் பகிர்ந்துகொள்ள மத்திய அரசு முன்வைத்த திட்டமே ‘சமுத்ரா மந்தன்’.

எதற்காக ரூ.84,000 கோடி ஒதுக்கீடு?

ஹைட்ரோகார்பன் தேடுதல் திட்டம் இயல்பாகவே சிக்கல் நிறைந்ததும், அதிக மூலதனம் தேவைப்படும். அதிலும் கடல் தரைமட்டத்திலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்கும் ‘ஆழ்கடல்’ மற்றும் ‘அதி ஆழ்கடல்’ திட்டங்களுக்குப் அதிநவீனத் தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவிலான முதலீடும் அவசியம்.

எதிர்காலத்தில் ஹைட்ரோகார்பன் கிடைக்கும் வாய்ப்புகள் கிருஷ்ணா - கோதாவரி, காவிரி, மகாநதி மற்றும் அந்தமான் போன்ற ஆழ்கடல் மற்றும் அதி ஆழ்கடல் படுகைகளில் இருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் கருதுகிறது.

எல்லைப் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுக்காகத் தோண்டப்படும் ஒரு கிணற்றுக்கு ஏறக்குறைய 125 மில்லியன் முதல் 150 மில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

தற்போதுள்ள பழமையான எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை முழுமையாகச் சார்ந்திருப்பது கடினம். ஆழ்கடல் மற்றும் அதி ஆழ்கடல் பகுதிகளில் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க ஒரு வலுவான உந்துதல் தேவைப்படுகிறது.

மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, இப்போதுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6% முதல் 7% வரை உற்பத்தி சரிவு ஏற்படுகிறது. இதனாலேயே ஆழ்கடல் மற்றும் அதி ஆழ்கடல் ஆய்வுகளை நோக்கி இந்தியா நகரத் தொடங்கியுள்ளது.

செலவினங்கள் எப்படி?

மொத்த நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 4 முக்கியப் பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அவை:

> நில அதிர்வுத் தரவுகள் சேகரிப்பு (Seismic Data Collection):

நில அதிர்வு ஆய்வு, கடல் தரைக்கு அடியில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இருப்பிடம் மற்றும் அதன் பண்புகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்துதல். இதற்கு ரூ.28,534 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வணிகமயமாக்கல் முயற்சி:

கடலின் ஆழ்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளங்களை வணிகமயமாக்குவதற்கான கடல்சார் உள்கட்டமைப்பு மையங்களை உருவாக்குதல். இதற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி மற்றும் சேவை மண்டலங்கள்:

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் சேவை மண்டலங்களை உருவாக்குதல். மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, முக்கிய உபகரணங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதையும் தரமான சேவைகளை வழங்குவதையும் உறுதி செய்தல். இதற்கான செலவு ரூ.2,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுதல்:

ஆழ்கடல் பகுதியில் ஆய்வுக்காக 60 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படவுள்ளன. இதற்காக மத்திய அமைச்சரவை ரூ.43,200 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், ஒரு கிணற்றைத் தோண்டுவதற்கான செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.675 கோடி (எது குறைவோ அது) அரசு நிதியுதவியாக வழங்கப்படும்.

ஆழ்கடல் ஆய்வில் இந்தியாவின் தற்போதைய நிலை:

மத்திய அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) மற்றும் ஓஎன்ஜிசி (ONGC) ஆகிய நிறுவனங்கள் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன. அடுத்த 7 ஆண்டுகளில் 150 ஆழ்துளைக் கிணறுகளை ஆழ்கடலில் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதிலிருந்து 5,600 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் மற்றும் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுக்க ஓஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது.

‘ஆயில் இந்தியா’ நிறுவனம் ஏற்கெனவே அந்தமான் கடல் பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, ‘விஜயபுரம்-2’ மற்றும் ‘விஜயபுரம்-3’ ஆகிய இடங்களில் இயற்கை எரிவாயு இருப்பதை உறுதி செய்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் பலன்கள்

> இந்த ஆய்வுப் பணிகள் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், சமுத்ரா மந்தன் திட்டமானது உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை ஆண்டுக்கு 80 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.

> நாட்டின் ஹைட்ரோகார்பன் வள இருப்பு 1.6 பில்லியன் டன்னிலிருந்து 2.2 பில்லியன் டன் அளவிற்கு விரிவடையும்.

> இந்தக் கூடுதல் உற்பத்தியின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை குறையும்.

> இதன்மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு வலுப்படுவதோடு, பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையும் கணிசமாகக் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT