சென்னை: வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பிரத்யேகமாக வாகனங்களை வடிவமைக்கும் உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது புதிய விற்பனையகத்தை சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று திறந்துள்ளது.
இதனை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் விற்பனைப் பிரிவு இயக்குநர் ஜூலியன் ஜென்கின்ஸ் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ‘சூப்பர் லக்சரி’ பிரிவில் உலக அளவில் தனக்கென ஒரு பிரத்யேக இடத்தை கடந்த 122 ஆண்டுகளாக தக்கவைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான வண்ணம், உட்புற அலங்காரம் மற்றும் தனிப்பட்ட அம்சங்களைத் தேர்ந்தெடுத்து கார்களை வடிவமைத்து கொள்ளும் வகையில் ‘பிஸ்போக் கமிஷனிங் அட்லியர்’ என்ற தனிப் பகுதியுடன் இந்த புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 44,000 வண்ண தேர்வுகளையும் வழங்குகிறது. 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரோல்ஸ் ராய்ஸின் ‘ஸ்பெக்டர்’ எலெக்ட்ரிக் கார் அமோக வரவேற்பை பெற்று, நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது மாடலாக உருவெடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து நிறுவனத்தின் புதிய மாடலான ‘கோஸ்ட் சீரிஸ் 2’ வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் சென்னை முதன்மை டீலர் வசந்தி பூபதி, மண்டல பொது மேலாளர் (ஆசிய-பசிபிக்) கென்னி அவுலியா, கே.யு.என் குழுமத்தின் தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.