கோப்புப்படம்
நாமக்கல்: தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பில் உலக முட்டை தினத்தை முன்னிட்டு இலவச முட்டை வழங்கும் விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சங்கத் தலைவர் சிங்கராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “உலக முட்டை தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே முட்டையின் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு 10 ஆயிரம் முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முட்டை நுகர்வு அதிகரிப்பு:
இந்தியாவில் தனிநபர் முட்டை நுகர்வு முன்பு ஆண்டுக்கு சராசரியாக 70 முதல் 80 முட்டைகளாக இருந்த நிலையில் தற்போது 110 முட்டைகளைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் மாநிலங்களில் சில பகுதிகளில் தனிநபர் நுகர்வு ஆண்டுக்கு 180 முதல் 200 முட்டைகள் வரை உள்ளது. ஆந்திர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்த செய்திகள் வெளியாகி வருகிறது. எனினும், தமிழகத்தில் கோழிப் பண்ணைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகின்றன.
கோழிகளுக்குத் தவறாமல் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதுடன். நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் உயிர்ப் பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் இங்கு பாதிப்பு எதுவும் இல்லை. தீவன பொருட்கள் விலை உயர்வு கோழித் தீவன மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பண்ணையாளர்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்காச்சோளம் கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரையிலும், சோயா கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மக்காச்சோளத்தை அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கிடைக்கச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது அதிகரித்து வரும் வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தீவன மூலப்பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை கோழிப்பண்ணைத் தொழிலுக்குச் சவாலாக உள்ளது. இதனால் முட்டை உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது” என்றார்.
முன்னதாக சங்க வளாகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முட்டை விநியோகம் செய்யப்பட்டன. சங்க செயலாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.