வேலூரில் உரிமை கோரப்படாத வங்கி இருப்பு மற்றும் வைப்புத் தொகைகளை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரியவர்களிடம் ஒப்படைத்தார் ஆர்பிஐ சென்னை மண்டல பொது மேலாளர் ராஜ்குமார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர்: தமிழகத்தில் 1.33 கோடி கணக்குகளில் ரூ.3,600 கோடி தொகை ரிசர்வ் வங்கி வசம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ராஜ்குமார் கூறினார்.
வேலூர் மாவட்டத்தில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை, வைப்புத் தொகை, காப்பீட்டுத் தொகை, பங்குத் தொகை உள்ளிட்டவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்பிஐ சென்னை மண்டல பொது மேலாளர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உரிமை கோரப்படாத தொகைகளின் காசோலைகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்புத் தொகைகள், கல்வி வளர்ச்சி நிதிக்கு மாற்றப்படும்.
அவற்றுக்கு உரிமை கோரினால், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் 1.33 கோடி கணக்குகளின் கீழ் ரூ.3,600 கோடி தொகை உரிமை கோரப்படாமல் உள்ளது.
இந்த தொகைக்குரியவர்கள் அல்லது அவர்களது வாரிசுதாரர்கள் udgam.rbi.org.in என்ற தளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். ஆதார் எண், பான் கார்டு, இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார். வேலூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் உடனிருந்தார்.