புதுடெல்லி: மேற்கு ஆசிய போர் காரணமாக, மார்ச் காலாண்டு சற்று மந்தமாக இருந்தது. ஆனாலும், 2025- 26 நிதியாண்டில் ரிலையன்ஸ் குழுமம் ரூ.95,754 கோடி லாபத்தையும், ரூ.11.76 லட்சம் கோடி வருவாயையும் ஈட்டியுள்ளது.
ஆனாலும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 6-வது ஆண்டாக எவ்வித சம்பளமும் பெறவில்லை. கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், 2020- 21 நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தனது ஊதியத்தைத் தானாகவே முன்வந்து துறந்தார்.
2021- 22, 2022- 23, 2023- 24, 2024- 25 ஆகிய நிதி ஆண்டுகளைத் தொடர்ந்து, கடந்த 2025- 26 நிதியாண்டிலும் அவர் இதே முடிவை எடுத்துள்ளார். தன் வசமுள்ள பங்குகளுக்கான ஈவுத் தொகை (டிவிடெண்ட்) மட்டுமே அவரது முக்கிய வருவாயாக உள்ளது. சுமார் ரூ.9.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலகின் 21-வது கோடீஸ்வரராக உள்ளார்.
கரோனா தொற்றுக்கு முன்பே கூட, முகேஷ் 2008- 09 நிதியாண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது ஊதியத்தை ரூ.15 கோடி என்ற அளவில் தானாகவே முன்வந்து வரம்புக்குள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.