வணிகம்

இந்தியாவில் ஐபோன் 18 சீரிஸ் விற்பனை தொடக்கம்: அதிகாலை முதலே வரிசையில் நின்ற பயனர்கள்

வேட்டையன்

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் போன் மற்றும் ஐபோன் 18 சீரிஸ் விற்பனை இந்தியாவில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லியில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் ‘ஆப்பிள் ஸ்டோரில்’, ஆப்பிள் சாதன ஆர்வலர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கினர்.

மூன்று வண்ணங்களில் ஐபோன் 18 புரோ மற்றும் ஐபோன் புரோ மேக்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த 12-ம் தேதி இந்த போனுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது. அந்த வகையில் இதன் விற்பனை இன்று முதல் இந்தியாவில் தொடங்கியுள்ளது. ஐபோன் 18 புரோ (256 ஜிபி ஸ்டோரேஜ்) போனின் விலை இந்தியாவில் ரூ.1,64,900. ஐபோன் 18 புரோ மேக்ஸ் (256 ஜிபி ஸ்டோரேஜ்) போனின் விலை ரூ.1,79,900.

இதோடு ஏர்பாட்ஸ் 5, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 உள்ளிட்ட சாதனங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

ஐபோன் Duo

ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் அனைவரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனந்த்தின் முதல் ஃபோல்டபிள் போனான ஐபோன் Duo-வும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை இந்தியாவில் ரூ.2,99,900 முதல் தொடங்குகிறது.

வரிசையில் காத்திருந்து வாங்கிய மக்கள்

வழக்கமாக புதிய மாடல் ஐபோன்கள் விற்பனை தொடங்கும் முதல் நாளன்று இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோன் ஆர்வலர்கள் அதிகம் திரண்டு, வரிசையில் காத்திருந்து வாங்குவார்கள். இந்த முறை ஐபோன்களின் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் வழக்கம் போலவே ஐபோன் ஆர்வலர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து போன்களை வாங்கினர்.

“அதிகாலை 5 மணி முதல் நான் வரிசையில் காத்திருக்கிறேன். பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். நான் நீண்ட காலமாக ஐபோன்களை வாங்கி வருகிறேன். எனது முதல் போன் ஐபோன் 7. அப்போது முதல் வாங்கி வருகிறேன். இது ஐபோன் ஆர்வலர்களுக்கு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோனை வாங்க நான் முயற்சிக்கிறேன்” என்று பெங்களூருவை சேர்ந்த ராகுல் தெரிவித்தார்.

“நான் என் மனைவிக்காக ஐபோன் வாங்க வந்துள்ளேன். ஐபோன் 18 புரோ வாங்க வந்துள்ளேன். மனைவியின் ஸ்மார்ட்போன் அனுபவத்தை அப்கிரேட் செய்யும் வகையில் இந்த யோசனை. அதுவும் புதிதாக சந்தைக்கு வந்துள்ள வண்ணம் தான் எனது சாய்ஸ். இதற்காகவே தங்க நகைகளை விற்று விட்டேன்” என்று டெல்லியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். அவர் டெல்லியில் உள்ள டிஎல்எஃப் மாலில் புதிய ஐபோனை வாங்க வந்திருந்தார். பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்தவர்களும் வரிசையில் காத்திருந்த ஐபோன்களை வாங்கி சென்றனர்.

SCROLL FOR NEXT