வணிகம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாகவே நீடிக்கும்: ரிசர்வ் வங்கி

வேட்டையன்

மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முந்தைய அளவான 5.25 சதவீதத்திலேயே ரெப்போ வட்டி விகிதம் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெறும். அப்போது சூழ்நிலையை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றுவது தொடர்பான முடிவும் அடங்கும். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

“மேற்காசிய போர் காரணமாக முக்கிய வணிக பாதையில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இது உலக பொருளாதாரத்துக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்த சூழலில் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே நீடிக்கும்.

நடப்பு நிதியாண்டில் தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கணிப்பை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிகம் ஆகும். உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் உச்சம் அடையும்” என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

ரெப்போ விகிதம்?

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கி தற்போது இதில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் இப்போதைக்கு உயராது எனத் தெரிகிறது. ஏனெனில், வழக்கமாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து 5.25 சதவீதமாக ஆர்பிஐ நிர்ணயித்தது. தற்போது அந்த விகிதம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT