சிவகாசி - விருதுநகர் சாலையில் வடமலாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளை சுற்றி தேங்கி உள்ள மழைநீர்.
சிவகாசி: சிவகாசி பகுதியில் பெய்த கனமழையால் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உரிமம் ரத்து மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளால் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
250-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு திரும்ப பெறப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் இறுதி முதல் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி தொடங்கியது. சிவகாசி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகளில் ஆடிப்பெருக்கு அன்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாவளி விற்பனை தொடங்கியது.
ஆயுத பூஜையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை நாட்களில் மொத்த விற்பனை மும்முரமாக நடைபெற்றது. சிவகாசி பகுதியில் இம்மாத தொடக்கம் முதலே பரவலாக சாரல் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் வடகிழக்குப் பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியதை அடுத்து கனமழையாக பெய்ய தொடங்கியது.
இரு நாட்களாக பெய்த கனமழையில் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளை சுற்றிலும் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது.
உற்பத்தி செய்த பட்டாசுகளை உலர வைக்க முடியாததால் உற்பத்தியை தொடர முடியாத சூழல் நிலவுவதுடன், விற்பனையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறியதாவது: தீபாவளி பண்டி கைக்கு வடமாநிலங்களுக்கு 90 சதவீத பட்டாசுகள் அனுப்பப்பட்டு விட்டன. தற்போது தமிழ கத்தின் பிற மாவட்டங்களுக்கு பட்டாசுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் பட்டாசுகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர் மழையால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி முற்றிலும் முடங்கி உள்ளது. தற்போது பட்டாசு ஆலைகளில் பேக்கிங் பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன.
வார இறுதி நாட்களிலேயே வெளியூர் மக்கள் பட்டாசு வாங்க சிவகாசி வரும் நிலையில், மழை காரணமாக விற்பனை மந்தமடைந்துள்ளது. இந்த வாரம் சனி, ஞாயிறு விற்பனையையே பெரிதும் நம்பி உள்ளோம் என்று கூறினர்.