வணிகம்

ஏசி பெட்டிகளில் ஆர்ஏசி பயணிகளுக்கும் படுக்கை விரிப்பு வழங்குவது கட்டாயம்: ரயில்வே வாரியம்

செய்திப்பிரிவு

சென்னை: ரயில்களின் குளிர்சாதன (ஏசி) பெட்டிகளில் ஆர்ஏசி முறையில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் படுக்கை விரிப்பு கட்டாயம் வழங்க வேண்டும் என்று அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் மிகக் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

விரைவு ரயில்களில் மூன்றடுக்கு, இரண்டடுக்கு, முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இரண்டு படுக்கை விரிப்புகள், தலா ஒரு கம்பளி, தலையணை, முகத் துண்டு வழங்கப்படுகின்றன. இதற்கான கட்டணம், மொத்த பயணக் கட்டணத்திலேயே சேர்க்கப்படுகிறது. அதேநேரம், இப்பெட்டிகளில் பயணிக்கும் ஆர்ஏசி பயணிகளுக்கு படுக்கை விரிப்பு வழங்கப்படாமல் இருந்தது.

ரயில்வே வாரியம் ஏற்கெனவே ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் ஆர்ஏசி பயணிகளுக்கும் படுக்கை விரிப்பு வழங்கப்பட வேண்டும் என விதிகளை இயற்றியிருந்தது.

இருப்பினும், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பெட்டி அட்டெண்டர்களுக்கு இந்த விதிகள் குறித்த முறையான விழிப்புணர்வு அல்லது தௌிவு இல்லாததால், ஆர்ஏசி பயணிகள் கேட்காத வரை அவர்கள் படுக்கை விரிப்புகள் வழங்குவதைத் தவிர்த்து வந்தனர்.

இதற்கிடையில், படுக்கை விரிப்பு வழங்கப்படாதது தொடர்பாக ஆர்ஏசி பயணிகள் மூலமாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, ரயில்களின் குளிர்சாதன (ஏசி) பெட்டிகளில் ஆர்ஏசி முறையில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் படுக்கை விரிப்பு முழுமையாக வழங்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏசி வகுப்புகளுக்கான பயணக் கட்டணத்திலேயே இதற்கான தொகையும் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த வசதிக்கு பயணிகள் தனியாக எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே, ஆர்ஏசி பயணிகளுக்கும் இரண்டு படுக்கை விரிப்புகள், ஒரு கம்பளி , ஒரு தலையணை மற்றும் ஒரு முகத் துண்டு அடங்கிய முழு தொகுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவு ஏசி சேர் கார் பெட்டிகளுக்குப் பொருந்தாது. மற்றபடி ஏசி இரண்டடுக்கு பெட்டி மற்றும் ஏசி மூன்றடுக்கு பெட்டி ஆகிய வகுப்புகளில் பயணிக்கும் அனைத்து ஆர்ஏசி பயணிகளுக்கும் இது பொருந்தும். ரயில்வே வாரியத்தின் உத்தரவை தவறாமல் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, ஓய்வுபெற்ற ரயில்வே தொழிற்சங்க தலைவர் மனோகரன் கூறுகையில்,"படுக்கை விரிப்பு, தலையணை பற்றாக்குறையை ஈடுசெய்ய ஆர்.ஏ.சி பயணிகளுக்கு கொடுப்பதை ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் தவிர்க்கிறார்கள். முழுமையாக கட்டணம் செலுத்திவிட்டு, அமர்ந்து கொண்டு பயணம் செய்யும் ஆர்ஏசி பயணிகள் உண்மையிலே பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு ஏ.சி. குளிரில் கம்பளி போர்வைகள் வழங்காமல் பயணம் செய்ய விடுவது மேலும் அவர்களை தண்டிப்பது போல ஆகிறது. ரயில்வே நிர்வாகம் இதில் கண்டிப்பு காட்டுவது மிகவும் வரவேற்கத்தக்கது" என்றார்.

SCROLL FOR NEXT