சிங்கூர்: மேற்கு வங்கத்தில் அமோக விளைச்சலால் உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.3 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் சிங்கூர் பகுதியில் இந்த ஆண்டு உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளது. அதேநேரம் அதிக வரத்து காரணமாக அதன் ஒரு விலை ரூ.3 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவற்றைச் சாலைகளில் கொட்டி வருகின்றனர்.
இது குறித்து விவசாயி பிரதீப் தாஸ் கூறும்போது, "உருளைக்கிழங்கின் அதிகப்படியான உற்பத்தி வருவாயைக் குறைத்துவிட்டது. ஒரு பிகா நிலத்தில் உருளைக் கிழங்கு பயிரிட சுமார் ரூ.20,000 செலவாகிறது, ஆனால் எங்களுக்கு ரூ.16,000 முதல் ரூ.18,000 வரை மட்டுமே கிடைக்கிறது" என்றார்.
அவரது கூற்றுப்படி, கையிருப்பு மிக அதிகமாக இருப்பதால், குளிர்பதனக் கிடங்குகளில் உள்ள உருளைக் கிழங்குகளைக் காலி செய்யவே ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம். எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், உருளைக் கிழங்குகள் வெளியே செல்ல முடியாமல் தேக்கமடைந்து விலை சரிந்துள்ளது.
இந்த ஆண்டு உருளைக்கிழங்கு உற்பத்தி சுமார் 1.4 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இந்த உபரி வரத்து சேமிப்பு நிலையங்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குளிர்பதனக் கிடங்குகள் அனைத்தும் முழுமையாக நிரம்பிவிட்டன என்றும், புதிய மூட்டைகளை வைக்க இடமில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயி ஜோஹர் தத்தா கூறும்போது, "மற்ற மாநிலங்களிலும் உருளைக் கிழங்கு உற்பத்தி அதிகமாக இருப்பதால், வங்காள உருளைக் கிழங்குக்கான தேவை குறைந்துவிட்டது. கிடங்குகளில் இடமில்லாததால் வெளியில் வைக்கப்படும் உருளைக் கிழங்குகள் அழுகி வீணாகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்" என்றார்.