புதுடெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்துவது தொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியாவுக்கு அமெரிக்கா 18 சதவீத வர்த்தக வரி விதித்தது. ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து அந்த வரி விதிப்பு விவகாரத்தில் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் அமைச்சர் பியூஷ் கோயல் எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் ஆகியோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக மிகவும் பயனுள்ள ஆலோசனைகள் இந்த சந்திப்பின்போது மேற்கொள்ளப்பட்டன.இவ்வாறு கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களது இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்டத்திற்கான சட்டப்பூர்வ வரைவுகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இத்தகைய சூழலில், இந்த உயர்மட்ட அளவிலான சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.