புதுடெல்லி: கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா - ஈரான் இடையே போர்மூண்டது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கியது. போர் காரணமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலரில் இருந்து 120 டாலர் வரை அதிகரித்தது.
தற்போதைய சூழலில் ரஷ்யா, வெனிசுலா, அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து 3 முதல் 7 நாட்களுக்குள் கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவை வந்தடையும். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவை வந்தடைய 35 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை ஆகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் நீண்ட தொலைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினசரி ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதை ஈடுகட்ட கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. கடந்த மே 19-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் தலா 90 பைசா அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 87 பைசாவும், ஒரு லிட்டர் டீசல் 91 பைசாவும் விலை உயர்த்தப்பட்டது. அந்தந்த மாநிலங்களின் வரி விதிப்புக்கு ஏற்ப விலையில் மாற்றங்கள் உள்ளன. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 82 காசுகள் உயர்ந்து ரூ.105.31-க்கும், ஒரு லிட்டர் டீசல் 87 காசுகள் உயர்ந்து ரூ.96.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51, டீசல் ரூ.92.49, மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.49, டீசல் ரூ.95.02-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் சிஎன்ஜி எரிவாயு விலை ஒரு கிலோவுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. மக்களின் பணம் தவணை முறையில் கொள்ளை அடிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக இருந்தது. அந்த காலத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அப்போது மக்களின்பணம் பகிரங்கமாக கொள்ளை அடிக்கப்பட்டது. இந்தியாவில் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வால் யார், யார் பலன் அடைகிறார்கள் என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.