புதுடெல்லி: அமெரிக்காவின் ஆஸ்டின் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், இந்தியாவில் பணியாற்றும் சுமார் 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது, உலகளாவிய அளவில் அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் 30,000 ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
ஆரக்கிள் நிறுவனம், தனது செயல்பாடுகளை முறைப்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு அந்நிறுவனம் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ‘‘நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏஐ உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக, தற்போது நீங்கள் வகிக்கும் பணியிடம் தேவையற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, துரதிர்ஷ்டவசமாக இந்த நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆரக்கிள் நிறுவனத்திற்கு மொத்தம் 30,000 ஊழியர்கள் உள்ள நிலையில், தற்போது சுமார் 40% பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த ஒரு மாதத்திற்குள் மற்றுமொரு கட்ட பணிநீக்கம் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆரக்கிள் நிறுவனம் சில நிதியுதவிகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு 15 நாட்களுக்கான ஊதியம், விடுப்புத் தொகை மற்றும் பணிக்கொடை, ஒரு மாத நோட்டீஸ் காலத்திற்கான ஊதியம் மற்றும் கூடுதலாக இரண்டு மாத ஊதியம் ஆகியவை சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.