வணிகம்

வணிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது மத்திய பட்ஜெட்: மதுரை தொழில் துறையினர் கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: மத்திய பட்ஜெட் குறித்து மதுரை மாவட்ட தொழில்துறையினர், வியாபாரிகள் சிலர் வரவேற்றும், சிலர் ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறினர்.

தமிழ்நாடு விவசாயிகள் ஒருங் கிணைப்புக்குழு மாநில கவுரவத் தலைவர் எம்.பி.ராமன்: தமிழகத்தில் அரியவகை கனிமவள ஆய்வுமையம் மற்றும் கடலோர மாவட்டங்களில் தொழிற்சாலை அமைக்கப்படுவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், இந்தத் திட்டங்களால் விளை நிலங்கள் பாதிக்கப்படாது என்பது குறித்து தெளிவான விளக்கம் தேவை.

          

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச உத்தர வாத விலை அறிவிப்பு இல்லாதது, முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க வரைவுத் திட்டம் இல்லாதது ஆகியவை ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன்: மாவட்டந்தோறும் மகளிர் விடுதி, வரும் 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழிப் பாதைகளை உருவாக்கி, அதன்மூலம் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை 12 சதவீதமாக அதிகரிப்பது, 17 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு வரி குறைப்பு உள்ளிட்ட வழக்கமான நிதிநிலை அறிவிப்புகளாகத்தான் பார்க்க முடிகிறது.

நாடு முழுவதும் புதிதாக 7 அதிவேக ரயில் தடங்கள், நிதிப் பற்றாக்குறையை 4.3 சதவீதமாக குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்துக்கென எந்தவொரு அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் தொழில் வணிகத் துறையினரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்.

ராமன், ஜெகதீசன், பத்மநாதன், முத்துராஜா, சம்பத் ஸ்ரீநிவாசன்

தென்னக ரயில்வே பயணிகள் சங்கப் பொதுச்செயலாளர் பத்மநாதன்: நாட்டின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் சரக்குரயில் பாதை அமைப்பு, சென்னை - பெங்களூரு- ஹைதராபாத் அதிவேக ரயில் சேவைத் திட்டம், வருமானவரி தாக்கல் முறையை எளிமைப்படுத்தியது உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது.

மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்னாள் பொருளியல் துறைத் தலைவர் சி. முத்துராஜா: நீடித்த வளர்ச்சிக்கு உதவும் திட்டங்களான மருத்துவம், தொழில் நுண்ணறிவு, அறிவுசார் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான திட்டங்கள் பாராட்டத்தக்கவை.

கணினி மற்றும் தகவல் திறன் சார்ந்த அந்நிய நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மற்றும் வரிவிலக்கு வளர்ச்சிக்கு துணை புரியும். வணிக மற்றும் மதிப்புமிக்க வேளாண் பயிர்களுக்கு முன்னுரிமை, பெண் தொழில் முனைவோர் போன்ற அறிவிப்புகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தரும்.

போக்குவரத்துக்கழகப் பணியாளர் சம்மேளன மாநில துணைத் தலைவர் சம்பத் ஸ்ரீனிவாசன்: தனியாரின் பங்களிப்பு அதிகரிக்கும்போது வேலைவாய்ப்பு, பணி நிரந்தரம் சிக்கலாக மாறும். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்பில் கண்காணிக்கும் அலுவலர்களின் அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. வருமான வரியில் மாற்றம் இல்லை. எனவே சாமானிய தொழிலாளர் வர்க்கத்துக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

மதுரை எம்பி சு. வெங்கடேசன் கூறுகையில், மத்திய நிதி நிலை அறிக்கையில் புதிய ரயில் பாதை, இரட்டை ரயில் பாதை, ரயில் வண்டிகள் வாங்குவதற்கு என மொத்தம் ரூ.2.78 லட்சம் கோடி ரயில்வே முதலீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நிதியாண்டில் 500 கி.மீ. புதிய பாதை திட்டங்களும் 2,400 கி.மீ. இரட்டைப் பாதை திட்டங்களும் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்துக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை. பிரதம மந்திரி கதிசக்தி திட்டத்தில் ஒன்று கூட தமிழகத்துக்கோ, கேரளத்துக்கோ இல்லை. பிரதம மந்திரி கதி சக்தி திட்டம், வட இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும்போது தமிழகத்துக்கு இல்லை என்பது கண் டிக்கத்தக்கது என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT