கோப்புப் படம்

 
வணிகம்

ஐஐடி, ஐஐஎம்-ல் பயிலும் 3% மாணவர்களுக்கு 50% நிதி: தொடரும் நிதிப் பங்கீட்டு முரண்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வின் உயர்​கல்​வித் துறைக்​கான வரவு-செல​வுத் திட்​டத்​தில் (பட்​ஜெட்), ஐஐடி, ஐஐஎம் மற்​றும் என்​ஐடி போன்ற ஒரு சில உயர் கல்வி நிறு​வனங்​கள் மட்​டுமே மொத்த நிதி​யில் பாதியை தட்​டிச் செல்​கின்​றன. ஆனால், நாட்​டின் 97% மாணவர்​கள் பயிலும் இதர நூற்​றுக்​கணக்​கான கல்வி நிறு​வனங்​கள் போதிய நிதி​யின்றி தவிக்​கும் நிலை தொடர்கிறது.

இது வெறும் நிதிப் பகிர்வு தொடர்​பான சிக்​கல் மட்​டுமல்ல, யாருடைய எதிர்​காலத்​திற்கு அரசு முன்​னுரிமை அளிக்​கிறது என்​ப​தைக் காட்​டும் கண்​ணாடி​யாக​வும் உள்​ள​தாக கல்வி ஆய்​வாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இந்த ஆண்​டில் மட்​டும் ஜேஇஇ தேர்வை 15 லட்​சம் மாணவர்​கள் எழு​தினர். ஆனால், அங்​குள்ள இடங்​களோ வெறும் 18,191 மட்​டுமே. இதே நிலை​தான் மருத்​து​வக் கல்விக்​கான ‘நீட்’ தேர்​விலும் நில​வு​கிறது.

எய்ம்ஸ் போன்ற முதன்மை நிறு​வனங்​களில் சேர லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். கல்​வித் தாகம் கொண்ட மாணவர்​களின் எண்​ணிக்கை கோடிகளில் இருக்க, வாய்ப்​பு​கள் மட்​டும் மிகக் குறுகிய அளவில் இருப்​பது கவலை​யளிப்​ப​தாக உள்ளது.

மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் புள்​ளி​விவரங்​களின்​படி, ஐஐடி, ஐஐஎம் மற்​றும் என்​ஐடி-களில் ஆண்​டு​தோறும் சுமார் 60,000 இடங்​கள் மட்​டுமே உள்​ளன. இது ஒட்​டுமொத்த மாணவர்சேர்க்​கை​யில் வெறும் 2.6% ஆகும். இருப்​பினும், உயர் கல்விக்கு ஒதுக்​கப்​படும் மொத்தபொது நிதி​யில் 50%-க்​கும் அதி​க​மான தொகையை இந்த 3 சதவீதத்​திற்​கும் குறை​வான மாணவர்​களே பெறுகின்​றனர். மறு​புறம், 97% மாணவர்​களுக்​குக் கல்வி வழங்​கும் 650-க்​கும் மேற்​பட்ட பல்​கலைக்​கழகங்​கள் எஞ்​சிய 50% நிதி​யைக் கொண்டு இயங்க வேண்​டி உள்ளது.

2026-27 நிதி​யாண்​டில், உயர்​கல்​வித் துறைக்கு மொத்​தம் ரூ.55,727.22 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதில் சுமார் 75 நிறு​வனங்​களை மட்​டுமே உள்​ளடக்​கிய ஐஐடி, ஐஐஎம் மற்​றும் என்​ஐடி-களுக்கு மட்​டும் ரூ.18,675 கோடிக்கு மேல் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதில், ஐஐடி-களுக்​கான ஒதுக்​கீடு ரூ.12,123 கோடி​யாக​வும், என்​ஐடி-களுக்​கான ஒதுக்​கீடு ரூ.6,260 கோடி​யாக​வும், ஐஐஎம்​-களுக்​கான ஒதுக்​கீடு ரூ.292 கோடி​யாக​வும் உள்ளது.

மத்​திய பல்​கலைக்​கழகங்​கள் 57 உள்​ளன; அவற்​றில் சுமார் 2.9 லட்​சம் மாணவர்​கள் பயில்​கின்​றனர். அவற்​றுக்கு ரூ.17,440.58 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், மாநில அரசு பல்​கலைக்​கழகங்​களில் பயிலும் 3.2 கோடி மாணவர்​களின் நிலை​தான் கேள்விக்​குறி​யாக உள்​ளது. போதிய நிதி​யின்​மை​யால் அங்கு உள்​கட்​டமைப்பு வசதி​கள், பேராசிரியர்​கள் நியமனம் மற்​றும் ஆராய்ச்​சிப் பணி​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

SCROLL FOR NEXT