வணிகம்

தமிழகத்தில் வெங்காயம் விலை மீண்டும் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சென்னை / திருச்சி: தமிழகத்தில் வெங்காயம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கூட்டுறவு சங்க அங்காடிகள் மூலம் மீண்டும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக, திருச்சி காந்தி மார்க்கெட்டில் சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது கிலோ ரூ.90-க்கும், பெரிய வெங்காயம் தற்போது கிலோ ரூ.65 முதல் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வெங்காயம் வரத்து ஓரளவு அதிகமாக இருந்ததால் விலை குறைந்திருந்தது. வெங்காயம் வரத்து உள்ள மாநிலங்களிலும், தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது” என்றனர்.

கடந்த மாதம் வெங்காய விலை அதிகமாக இருந்தபோது, மக்களுக்கு உதவும் வகையில், இந்திய தேசிய கூட்டுறவு கூட்டமைப்பிடம் இருந்து தமிழக அரசு 1,000 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஓரிரு நாட்கள் மட்டும் இந்த விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்திருப்பதால், கூட்டுறவு சங்கம் மூலம் மீண்டும் வெங்காயத்தை குறைந்த விலைக்கு அளிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

SCROLL FOR NEXT