வணிகம்

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் இழுபறி: 108 டாலரை நெருங்கும் கச்சா எண்ணெய் விலை

டெக்ஸ்டர்

டெஹ்ரான்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைய்ல் இழுபறி நீடித்து வருவதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து 108 டாலரை எட்டியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடங்கியுள்ளது. அமைதி ஒப்பந்தம் மற்றும் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரான் முன்வைத்த புதிய முன்மொழிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். "ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள முடியாது. பேச்சுவார்த்தையில் அவர்கள் எல்லை மீறிச் செயல்படுகிறார்கள்" எனத் தெரிவித்த ட்ரம்ப், இருப்பினும் இந்த வார இறுதியில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடரலாம் என்று கூறியுள்ளார்.

கப்பல் போக்குவரத்துப் பாதைகள் முடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் உடனடி கச்சா எண்ணெய் தேவைகளுக்கான போட்டி அதிகரித்துள்ளது. சவுதி அரேபியா தனது மாற்று குழாய் வழியே எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனிடையே, டீசல் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியமும் தங்களது உறுப்பு நாடுகளுக்கு ஏற்படக்கூடும் ஆற்றல் தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைகளில் தெளிவான முடிவு எட்டப்படாத வரை, கச்சா எண்ணெய் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT