கிரே நூல் தயாரிக்கும் ஓபன் எண்ட்(ஓஇ) நூற்பாலைகளில் முக்கிய மூலப்பொருளான கழிவுப் பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் உற்பத்தியை 50 சதவீதம் குறைக்க தொழில்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 600 ஓஇ (கிரே நூல், கலர் நூல் இரண்டு தயாரிக்கும்) நூற்பாலைகள் உள்ளன. இவற்றில் 2.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஸ்பின்னிங் நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சை முக்கிய மூலப்பொருளாக கொண்டு செயல்படும் 200(கிரே நூல் மட்டும் தயாரிக்கும்) ‘ஓஇ’ நூற்பாலைகளில் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்னர். கழிவுப் பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் மற்றும் தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தியாளரிடம் கூறியதாவது: மத்திய அரசு, ஸ்பின்னிங் நூற்பாலைகள் பயன்பெறும் வகையில் பருத்திக்கு இறக்குமதி வரி 11 சதவீதத்தை டிசம்பர் இறுதி வரை ரத்து செய்துள்ளது. இதனால் பஞ்சு விலை குறைந்துள்ளது. அதே போல் பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழைகளுக்கு முன் அமல்படுத்தப்பட்ட தரக்கட்டுப்பாடு உத்தரவையும் மத்திய அரசு நீக்கியுள்ளது.
இதனால் மேற்குறிப்பிட்ட மூலப்பொருட்கள் விலை சர்வதேச சந்தை விலையில் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சலுகைகளை பெற்றுக் கொண்ட ஸ்பின்னிங் நூற்பாலை தொழில்துறையினர் வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சை கொண்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் ‘ஓஇ’ நூற்பாலைகள் பாதிக்கும் வகையில் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது ஏற்புடையதல்ல.
தற்போது ஒரு கிலோ ரூ.100 ஆக இருக்க வேண்டிய கழிவுப் பஞ்சு(கோப்பர் நாயில் ரகம்) ரூ.108-ஆக உயர்ந்துள்ளது. சாதாரண பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ. 6,000 குறைந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கழிவுப் பஞ்சு விலை ஒரு கிலோவிற்கு ரூ.8 வரை உயர்த்தியுள்ளனர்.
மேலும் விலை தொடர்ந்து உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. ஜவுளி சங்கிலித் தொடரிலுள்ள ஒரு பிரிவு தொழில்துறையை (ஓஇ) முற்றிலும் பாதிக்கக்கூடிய செயலாகும். கழிவுப் பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் உற்பத்தியை 50 சதவீதம் குறைக்கு ‘ஓஇ’ தொழில் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் 60 ‘ஓஇ’ நூற்பாலை தொழில்துறையினர் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் நலிவடைந்து தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர். கழிவுப் பஞ்சு விலையை ஸ்பின்னிங் நூற்பாலை நிர்வாகத்தினர் குறைப்பது மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.