புதுடெல்லி: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களது வெளிநாட்டு வருமானத்தை இந்தியாவில் டெபாசிட் செய்ய அனுமதிப்பதற்காக, எப்சிஎன்ஆர் (பி) (Foreign Currency Non-Resident (Bank)) என்ற திட்டத்தை, இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. இதில் அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
அதை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எப்சிஎன்ஆர் (பி) டெபாசிட்டுகள் குறிப்பிட்ட காலத்துக்கான நிரந்தர வைப்புக் கணக்குகளாகும். இதில் முதலீடு செய்யப்படும் அசல் தொகையும், வட்டியும் வெளிநாட்டு நாணயத்திலேயே வழங்கப்படும். இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட தொகை 100 பில்லியன் டாலரை (ரூ.9.47 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
என்ஆர்ஐ-களிடம் இருந்து பெருமளவில் வந்த டாலர் வரத்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை வரலாறு காணாத அளவுக்கு 729.3 பில்லியன் டாலராக (ரூ.68.88 லட்சம் கோடி) உயர்த்தியுள்ளது. மத்திய கிழக்குப் போர், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் மற்றும் சரிந்து வரும் இந்திய ரூபாயை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்த நிலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
அதிக அளவிலான பண வரவு ஏற்பட்டால், பின்னர் அந்த நிதி வெளியேறுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம் என்ற கவலை எழுந்ததைத் தொடர்ந்து, முதலில் செப்.30-ம் தேதி வரை செயல்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆக.31-ம் தேதியுடன் நிறுத்தி விட்டது. எனினும், ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள டெபாசிட்களுக்கான ஸ்வாப் வசதியை செப். 11-ம் தேதி வரை வங்கிகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.