புதுடெல்லி: பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பெறப்பட்ட முதலீடு நவம்பரில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளதாவது: "பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்கள் நவம்பரில் ரூ.29,911 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளன. இது, முந்தைய அக்டோபர் மாதத்தை விட 21 சதவீதம் அதிகம்.
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என தொடர்ந்து மூன்று மாதங்களாக பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடுகள் குறைந்து வந்த நிலையில், நவம்பரில் அதிகரித்துள்ளது.
இது, முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. பங்கு சார்ந்த பரஸ்பர முதலீட்டில் காணப்பட்ட இந்த நேர்மறையான உத்வேகத்தால் அந்த துறை நிர்வகிக்கும் சொத்துமதிப்பு நவம்பரில் ரூ.80.80 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அக்டோபரில் இது ரூ.79.87 லட்சம் கோடியாக இருந்தது. நவம்பரில் எஸ்ஐபி திட்டங்களில் சில்லறை முதலீட்டாளர்களின் பங்கேற்பு சற்று குறைவாகவே காணப்பட்டது.
அதன்படி, அக்டோபரில் ரூ.29,631 கோடியாக இருந்த எஸ்ஐபி முதலீடு நவம்பரில் ரூ.29,445 கோடியாக குறைந்துள்ளது. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டத்தில் ஆகஸ்டில் ரூ.33,430 கோடியும், செப்டம்பரில் ரூ.30,421 கோடியும் முதலீடு செய்யப்பட்டன. இவ்வாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.