வாஷிங்டன்: இந்தியா, ஈரான் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஈரான் சார்ந்த கிரிப்டோகரன்சி, தொழில்நுட்பங்கள், தங்கம், விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்துக்கு அமெரிக்கா தடை விதித்திருக்கிறது.
இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் சந்தித்துப் பேசினர். இரு தலைவர்களும் வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியிருப்பதாவது: இந்தியா, ஈரான் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். எந்தவொரு நாடும் ஈரானுக்கு உதவி செய்யக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கண்டிப்புடன் அறிவுறுத்தி உள்ளார்.
ஈரானின் வருவாயை முடக்க வேண்டும். இதன்மூலம் அந்த நாட்டின் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. மேலும் ஈரான் அரசு ஒருபோதும் அணு ஆயுதங்களை தயாரிக்கக்கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது மிகக் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதல் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள லராக் தீவு மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து ஈரானின் சிரிக், குசெஸ்தான் பகுதிகளை குறிவைத்து அமெரக்க ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசியது. இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 68 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இரண்டாவது நாளாக நேற்றும் ஈரான் ராணுவம் தாக்குதலை தொடர்ந்தது. இதன்படி ஐக்கிய அரபு அமீரகம், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசியது. வெடிகுண்டுகளை சுமந்து சென்ற ஈரானின் ட்ரோன்கள் அமெரிக்க ராணுவ தளங்களில் விழுந்து வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலுக்கு குவைத்தும், ஐக்கிய அரபு அமீரகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.