வணிகம்

உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழை இனி புதுப்பிக்க தேவையில்லை: எப்எஸ்எஸ்ஏஐ அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உணவுப் பொருட்​கள் தயாரிப்பு மற்​றும் விற்பனைக்கு தேவை​யான இந்​திய உணவுப் பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யத்​தின் (எப்​எஸ்​எஸ்​ஏஐ) பதிவுச் சான்றிதழ்கள் மற்​றும் உரிமங்​கள் இனி நிரந்​தர​மாகச் செல்​லும் என்​றும் அவற்​றைப் புதுப்​பிக்​கத் தேவை​யில்லை என்​றும் மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக எப்​எஸ்​எஸ்ஏஐ கடந்த 13-ம் தேதி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் உணவுப் பாதுகாப்​புத் தரத்தை வலு​வாகப் பராமரிக்​கும் அதே வேளை​யில், தொழில் செய்​வதை எளி​தாக்​கும் நோக்​கத்​துடன் கூடிய முக்​கிய ஒழுங்​கு​முறை மற்​றும் நடை​முறைச் சீர்​திருத்​தங்​களுக்கு மத்​திய சுகா​தார மற்​றும் குடும்ப நல அமைச்​சகம் ஒப்​புதல் வழங்கி உள்ளது.

          

மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​கள் மற்​றும் தொழில் துறையினருடன் நடத்​தப்​பட்ட விரி​வான ஆலோ​சனை​களுக்​குப் பிறகு இந்​தச் சீர்​திருத்​தங்​கள் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளன. இவை நிதி ஆயோக் அமைத்த நிதி​ சாரா ஒழுங்​கு ​முறை சீர்​திருத்தங்களுக்​கான உயர்​மட்​டக் குழு​வின் பரிந்​துரைகளுக்கு இணங்​க​வும் அமைந்​துள்​ளன.

இதன்​படி, உணவுப் பொருட்​கள் தயாரிப்பு மற்​றும் விற்​பனைக்கு இந்​திய உணவுப் பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யத்​தால் (எப்​எஸ்​எஸ்​ஏஐ) வழங்​கப்​படும் பதிவு​கள் மற்​றும் உரிமங்​கள் இனி வாழ்​நாள் முழு​வதும் செல்​லுபடி​யாகும். இதற்கு முன்​பு, உணவு வணிக நிறு​வனங்​கள் தங்​கள் பதிவு​களை​யும் உரிமங்​களை​யும் அவ்​வப்​போது புதுப்​பிக்க வேண்​டி​யிருந்​தது. புதிய முறை​யின் கீழ், புதுப்​பிக்க வேண்​டிய அவசி​யம் இல்​லை.

வரு​வாய் வரம்பு உயர்வு: மேலும் பதிவு மற்​றும் உரிமம் பெறுவதற்​கான விற்​று​வரு​வாய் வரம்​பும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. வரும் ஏப்​ரல் 1, 2026 முதல், ஆண்டு வரு​மானம் ரூ.1.5 கோடி வரை உள்ள நிறு​வனங்​களுக்கு அடிப்​படைப் பதிவு மட்​டுமே போது மானது (முன்பு ரூ.12 லட்​ச​மாக இருந்​தது). ரூ.50 கோடி வரை வருமானம் உள்ள நிறு​வனங்​கள் மாநில உரிமத்​தின் கீழும், ரூ.50 கோடிக்கு மேல் வரு​வாய் ஈட்​டும் நிறு​வனங்​கள் மத்​திய உரிமத்தின் கீழும் வரும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

உணவு சார்ந்த தொழில்​கள் செய்​வதை எளி​தாக்​கும் வகை​யில் இந்த சீர்​திருத்​தங்​கள் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளன. இதனால் உணவுத் தொழிலில் ஈடு​பட்​டிருக்​கும் நிறு​வனங்​கள் அல்​லது வியாபாரி​கள் அடிக்​கடி அரசு அலு​வல​கங்​களுக்கு அலைய வேண்டிய சுமை குறை​யும். இதனால் அவர்​கள் தங்​கள் வாழ்வாதா​ரம் மற்​றும் சுகா​தா​ரத் தரங்​களைப் பராமரிப்​ப​தில் அதிக கவனம் செலுத்​த முடி​யும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

தெருவோர வியாபாரிக்கு சலுகை: மற்றொரு முக்கிய சீர்திருத்தம், தெருவோர உணவு வியாபாரி களுக்கான இரட்டைப் பதிவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய விதிகளின்படி, தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதார பாதுகாப்பு, தெருவோர வியாபார ஒழுங்குமுறை) சட்டம், 2014-ன் கீழ் மாநகராட்சிகள் அல்லது நகர விற்பனைக் குழுக்களிடம் ஏற்கெனவே பதிவு செய்துள்ள வியாபாரிகள், எப்எஸ்எஸ்ஏஐ-ல் தானாகவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள்.

தனியாக பதிவு செய்யத் தேவையில்லை. வெவ்வேறு அதிகாரிகளிடம் இருந்து பல பதிவுகளைப் பெற வேண்டிய அவசியம் நீக்கப்படுவதால் 10 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர உணவு வியாபாரிகள் பயனடைவார்கள்.

SCROLL FOR NEXT