மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 
வணிகம்

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை: நிதின் கட்கரி

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களைக் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெற்ற பஸ்வேல்டு இந்தியா கான்கிளேவ் 2025 (Busworld India Conclave 2025) மாநாட்டில் உரையாற்றிய நிதின் கட்கரி, "டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு எதிர்காலமே இல்லை. உயிரி எரிபொருட்கள், சிஎன்ஜி, எல்என்ஜி மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற மாற்று எரிபொருட்களை நோக்கித் திரும்ப வேண்டிய அவசியம் வாகன உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இறக்குமதி மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகிய அம்சங்களில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

ஹைட்ரஜன் எரிபொருள் சார்ந்த போக்குவரத்துக்கான முன்னோடித் திட்டங்களை (pilot projects) அரசாங்கம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. டாடா மோட்டார்ஸ், வோல்வோ, அசோக் லேலண்ட் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள், ஹைட்ரஜன் எரிபொருள் சோதனைகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளன. நாங்கள் தற்போது 10 வழித்தடங்களில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் லாரிகள் மற்றும் பேருந்துகளை இயக்கி வருகிறோம். ஹைட்ரஜன் தான் எதிர்காலத்தின் எரிபொருள்.

அதேபோல முக்கிய மாற்று எரிபொருளாக எத்தனாலும் திகழ்கிறது. இதனால் மூலப்பொருட்களிலிருந்து எத்தனாலை இந்தியா உற்பத்தி செய்கிறது. வாகனங்கள் தொடர்ந்து எத்தனால்20 எரிபொருளில் இயங்கி வரும் அதே வேளையில், ஃப்ளெக்ஸ் - எரிபொருள் என்ஜின்களை உருவாக்கும் பணியில் வாகனத் துறை ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT