புதுடெல்லி: டெல்லி மாநகரச் சந்தைகளில் நீங்கள் எப்போதாவது பொருள்கள் வாங்கச் சென்றிருந்தால், அங்குள்ள கள நிலவரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.
ஒரு கையில் மூன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் அடங்கிய பைகள், மற்றொரு கையில் தின்பண்டப் பொட்டலங்கள், பையிலிருந்து நழுவி விழும் அலைபேசி, கடுமையான வியர்வை, கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம், இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறை “கொஞ்சம் வழி விடுங்கள்” என்று உரக்கக் கத்தும் குரல்கள் என அந்த இடமே பரபரப்பாகக் காணப்படும்.
லஜ்பத் நகர், சரோஜினி நகர் அல்லது சாந்தினி சவுக் என டெல்லியின் எந்தவொரு பாரம்பரியமிக்க சந்தையாக இருந்தாலும், அங்கு பொருள்கள் வாங்குவது என்பது எவ்வளவு உற்சாகமானதோ, அதே அளவுக்கு பெரும் சோர்வை ஏற்படுத்தக்கூடியதாகும்.
ஆனால், டெல்லியைச் சேர்ந்த புதிய தொழில்முனைவு (ஸ்டார்ட்-அப்) நிறுவனம் ஒன்று தற்போது இந்த நிலையை மாற்றியமைக்க முயன்று வருகிறது.
உண்மையைக் கூற வேண்டுமெனில், சோர்வடைந்த கணவர்கள், எரிச்சலடையும் காதலர்கள், திணறிப்போகும் தாயார்கள் மற்றும் ஒட்டுமொத்த நுகர்வோரின் சுமையைக் குறைக்கும் ஒரு வரப்பிரசாதமாக இந்த ஸ்டார்அப் உருவெடுத்துள்ளது. பெண்கள் இனி பாய் பிரண்ட் இல்லை என்று கவலைப்படத் தேவையில்லை.
“கேரிமென்” (CarryMen) என்ற பெயரிலான இந்த வாடிக்கையாளர் உதவிச் சேவை மையம், “நீங்கள் பொருள்கள் வாங்குங்கள்; சுமையை நாங்கள் சுமக்கிறோம்” என்ற எளிய தாரக மந்திரத்துடன் செயல்படுகிறது. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல் ஒன்றில் இருந்துதான் இந்த வணிக யோசனை பிறந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் நிறுவனர்கள், சிறு வயது முதற்கொண்டே தங்களது குடும்பத்தினருடன் இத்தகைய நெரிசல்மிக்க சந்தைகளுக்குச் சென்ற அனுபவம் கொண்டவர்கள்.
நீண்ட தூர நடைப்பயணம், எல்லையற்ற பொருள்களின் எடை, உணவக வரிசைகள் ஆகியவற்றால் பொருள்கள் வாங்குவதில் உள்ள மகிழ்ச்சி எவ்வாறு மறைந்துபோகிறது என்பதை அவர்கள் உணர்ந்தவர்கள்.
இதுகுறித்து அந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மக்களுக்குப் பொருள்கள் வாங்குவது பிடிக்கும்; ஆனால் அதனால் ஏற்படும் உடல் ரீதியான சோர்வை அவர்கள் வெறுக்கிறார்கள்.
மக்கள் நெரிசலான சந்தையின் நடுவில் நின்றுகொண்டு, பத்து பைகளைச் சுமப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் சுவைத்து மகிழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.
கட்டண விவரமும் சேவைகளும்
இந்தச் சேவையின் கீழ், ஒரு மணி நேரத்திற்கு ரூ.149 என்ற கட்டணத்தில், உதவியாளர் ஒருவர் வாடிக்கையாளர்களுடன் சந்தை முழுவதும் வருவார்.
இந்த உதவியாளர்கள் பொருள்களைச் சுமப்பது மட்டுமன்றி, கடைகளுக்கு வழிநடத்துவது, உணவக வரிசைகளில் காத்திருப்பது, வாகன நிறுத்துமிடம் அல்லது மெட்ரோ ரயில் நுழைவாயில் வரை பொருள்களைக்கொண்டு வந்து சேர்ப்பது மற்றும் வாடிக்கையாளர்கள் ஓய்வெடுப்பதற்கான இடங்களைக் கண்டறிவது உள்ளிட்ட உதவிகளைச் செய்கின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிம்மதியாக உலா வர முடியும்.