வணிகம்

ரூ.1,600 கோடியில் நிறைவேற்றப்பட்ட முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் டிச.7-ல் தொடக்கம்!

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சியின் முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 7-ல் தொடங்கி வைக்கிறார்.

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட மதுரை மாநகரின் இன்றைய ஒருநாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர். ஆனால், மாநகராட்சிக்கு வைகை அணையிலிருந்து தினமும் 115 மில்லியன் லிட்டா், வைகை ஆற்றுப்படுகையிலிருந்து 47 மில்லியன் லிட்டர், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் லிட்டர் ஆக மொத்தம் 192 மில்லியன் லிட்டா் குடிநீர் பெறப்பட்டுகிறது.

அதனால், நாளொன்றுக்கு 7 கோடி லிட்டர் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. வைகை அணை நீர்மட்டம் குறைந்தால் கடந்த காலத்தில் மதுரை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையால், அன்றாட தேவைக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு மதுரையின் குடிநீர் தேவையை மதிப்பீடு செய்த மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு 2034-ல் நகரின் தினசரி 317 மில்லியன் லிட்டர் குடிநீரும், 2049-ல் நகரின் தினசரி 374 மில்லியன் லிட்டர் குடிநீரும் தேவைப்படும் எனக் கூறியிருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சியில், மதுரை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப்பிலிருந்து நேரடியாக மதுரை நகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டா் குடிநீர் கொண்டு வருவதற்கான கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. தாமதத்தால் திட்டமதிப்பீடு 1,609.69 கோடியாக உயர்ந்துள்ளது. இடையில் சில காலம் முடங்கி கிடந்த இந்த திட்டம், சமீபகாலமாக வேகமெடுத்து நிறைவுபெறுவதற்கு மாநகராட்சி ஆணையர் சித்ரா முக்கிய காரணம். அவர் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி லோயர் கேம்ப், பண்ணைப்பட்டி ஆய்வுக்குச் சென்றும், அன்றாடம் இந்த திட்டப்பணி விவரங்களை அதி்காரிகளிடம் கேட்டு, விரைவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், நிறைவுபெற்ற வார்டுகளில் தினமும் அல்லது 2 நாளைக்கு ஒரு முறை சுகாதாரமான குடிநீரை மாநகராட்சி வழங்கி வருகிறது. டிசம்பர் 7-ம் தேதி மதுரை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தங்குடியில் நடக்கும் அரசு விழாவில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பணிகள் நிறைவுபெற்ற 85 வார்டுகளுக்கு தற்போது தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது" என்றார்.

இரவு பகலாக பணிபுரிந்த மாநகராட்சி ஊழியர்கள்: கடந்த நான்கரை ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த திட்டப்பணியை மேற்கொண்டனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சையில் உள்ளனர். மாநகர் பகுதியில் ஒரே நேரத்தில் பாதாளசாக்கடை, குடிநீர், புதிய சாலைப்பணிகள் நடந்ததால், ஒவ்வொரு சாலைகளிலும் காவல் துறை, நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்று குழிகளை தோண்டி குழாய்களை பதிக்க அதிகாரிகளும், ஊழியர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர்.

குடியிருப்பு பகுதிகளில் குழிகளை தோண்டும்போது மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஒருபுறம் எதிர்ப்பு தெரிவிக்க, அனைத்து எதிர்ப்புகளையும் கடந்து அதிகாரிகள் ஒருவழியாக இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.

SCROLL FOR NEXT