புதுடெல்லி: மெட்டா ஊழியர்களுக்கு நேற்றைய தினம் ‘இன்று அனைவரும் வீட்டில் இருந்தே பணிபுரியுங்கள்' என்ற ஒரு சாதாரண உத்தரவுடன் தொடங்கியது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் உள்ள ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்தது. இதனால் அவற்றின் வளாகங்களில் மக்கள்கூட்டம் இல்லை; அலுவலக அறைகளில் அரட்டைகள் இல்லை; வளாகத்தின் தாழ்வாரங்களில் ஊழியர்களின் பரபரப்பான நடமாட்டமும் இல்லை.
அதன் தொடர்ச்சியாக, ஊழியர்களின் மின்னஞ்சல் பெட்டிகளுக்கு அடுத்தடுத்து செய்திகள் வரத் தொடங்கின. மெட்டா பிளாட்பார்ம்ஸ் நிறுவனம், தனது ஒட்டுமொத்தப் பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் ஊழியர்களை (8,000) பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதற்கான முதல் அறிவிப்பு, சிங்கப்பூரில் உள்ள அதன் முக்கிய மையத்திலிருந்து வெளியானது.
சிங்கப்பூர் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணி) பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக ‘புளூம்பெர்க்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய நேர மண்டலங்களுக்கு ஏற்ப, அடுத்தடுத்த கட்டங்களாக இந்த பணிநீக்க அறிவிப்புகள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. முதலில் வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிட்டு, அதைத் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்ட மெட்டாவின் இந்த உத்தி ஐடி உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதன் பின்னணியில் செயற்கை நுண்ணறிவு மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணிநீக்க நடவடிக்கைக்கு முன்பு மெட்டா நிறுவனத்தில் சுமார் 78,000 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்; மேலும் பல ஆயிரம் ஊழியர்கள் வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
6000 காலி இடம் முடக்கம்
இதுகுறித்து அந்நிறுவனத்தின் முதன்மை மனிதவள அதிகாரி ஜானெல்லே கேல் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 7,000 ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய குழுக்களுக்கு மாற்றப்படுவார்கள். காலியாக இருந்த சுமார் 6,000 பணியிடங்கள் முடக்கப்பட்டுள்ளன.
மேலாண்மை நிலைகளில் உள்ள அதிகாரிகளின் அடுக்குகள் குறைக்கப்படுகின்றன. மேலும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட சிறிய குழுக்கள் மூலம், மிக விரைவாகவும் தன்னாதிக்கத்துடனும் செயல்படக்கூடிய எளிய நிறுவனக் கட்டமைப்பை நோக்கி நாம் நகர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.