உலகச் சந்தையைத் தனது விரல் அசைவில் கட்டுப்படுத்தி வந்த அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கம், இன்று ஆசியாவின் புதிய சக்தியாக வளர்ந்துவரும் இந்தியாவின் எழுச்சியால் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்கள், சீனாவுக்கு மாற்றாக உலகின் புதிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றி வருகின்றன.
உலக முதலீடுகள் அனைத்தும் டெல்லியை நோக்கிப் பாய்ந்து வருதைச் சகித்துக்கொள்ள முடியாத ட்ரம்ப் நிர்வாகம், இப்போது ‘அதிகப்படியான உற்பத்தி’ என்ற விநோதமான குற்றச்சாட்டை முன்வைத்து, இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடை விதிக்க முயல்கிறது.
‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியாவின் அசுர வளர்ச்சியைக் கண்டு அஞ்சுகிறாரா அல்லது பொறாமை கொள்கிறாரா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. நட்பு நாடு எனக் கூறிக் கொண்டே, இந்தியாவின் முதுகெலும்பாக திகழும் நான்கு முக்கியத் துறைகளைக் குறிவைத்திருக்கிறது அமெரிக்கா.
இந்தியாவின் பி.எல்.ஐ (PLI) திட்டங்களின் வெற்றியால் தங்களுக்கு வரவேண்டிய முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும் பறிபோவதாகக் கருதும் அமெரிக்கா, இப்போது 25 சதவீத வரி விதிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது.
புதிய உற்பத்தி மையம்:
இந்தியா உற்பத்தியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைத்து ஓர் உலகளாவிய உற்பத்தி மையமாக மாற விரும்புகிறது. மொபைல்போன் முதல் மருந்துப் பொருட்கள் வரை, ஸ்டீல், சூரிய மின்தகடுகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை உள்நாட்டுத் தொழில்துறைத் திறனை வளர்க்கும் முயற்சியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.
குறிப்பாக, சீனாவுக்கு மாற்றாகத் தங்கள் விநியோகச் சங்கிலியைப் பன்முகப்படுத்த விரும்பும் உலகளாவிய நிறுவனங்களை ஈர்க்க மோடி அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்தியாவின் இந்த உற்பத்தி லட்சியம் தற்போது அமெரிக்காவின் கண்களை உறுத்த தொடங்கி இருக்கிறது.
அதிகப்படியான உற்பத்தித் திறன் குறித்த வர்த்தக விசாரணையில் ‘மேக் இன் இந்தியா’, ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் பி.எல்.ஐ திட்டங்களின் பெயர்களை ட்ரம்ப் அரசு நேரடியாகக் குறிப்பிட்டுள்ளது.
வரிவிதிப்புக்கு இலக்கான நாடுகள்:
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்ட 189 பக்க அறிக்கையில், ‘கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன்’ என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும். உள்நாட்டுத் தேவையை விட மிக அதிகமாகப் பொருட்களை உற்பத்தி செய்து, சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் குவிப்பதால் (Dumping), அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகள் பறிபோவதாக வாஷிங்டன் குற்றம்சாட்டுகிறது.
1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ், இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீதம் வரையிலான சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இதில் சீனாவுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரையும், ஜப்பான், தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம், வங்கதேசம், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 14 நாடுகளுக்கு 25 சதவீதம் வரியும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறிவைக்கப்படும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம்:
2014-ல் தொடங்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ (ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 25 சதவீதமாக உயர்த்தும் இலக்கு), 2020-ல் தொடங்கப்பட்ட பி.எல்.ஐ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டங்கள், இறக்குமதியைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்க நிறுவனங்களுக்கு ஊக்க நிதி வழங்குகின்றன.
அரசே இலக்குகளை நிர்ணயித்து, மானியங்களை வழங்கி உற்பத்தியைப் பெருக்குவது ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறை’ என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் முதலீடு செய்வது, தங்களுக்கு வரவேண்டிய முதலீடுகளையும், தொழிற்சாலை வேலைவாய்ப்புகளையும் இந்தியா பக்கம் ஈர்த்துவிடுமோ என்ற அச்சம் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கவலையும் அச்சமும்
கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு சராசரியாக 13.5 சதவீதமாகவும் (அமெரிக்கா 9.9%, உலகச் சராசரி 15.4%), முதலீடு - ஜிடிபி விகிதம் சராசரியாக 34 சதவீதமாகவும் (அமெரிக்கா 21.6%) இருந்தது. போதுமான உள்நாட்டுத் தேவை இல்லாத நிலையில், இந்தியாவின் இந்த உபரி உற்பத்தி, அமெரிக்கச் சந்தையில் குறைந்த விலையில் குவிக்கப்பட்டு, தங்கள் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படலாம் என வாஷிங்டன் அஞ்சுகிறது.
2025-ல் இந்தியாவின் உலகளாவிய சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை 309 பில்லியன் டாலராக இருந்தாலும், அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக உபரி 2023-ல் 42.5 பில்லியன் டாலரிலிருந்து, 2024-ல் 45.2 பில்லியன் டாலராகவும், 2025-ல் 57.3 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தித் திறன், சோலார் உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சியைப் பார்த்து அமெரிக்கா அச்சம் கொள்கிறது.
இந்தியாவின் அதிக உற்பத்தித் திறனால் உள்நாட்டுத் தேவை குறையும்போது, அந்த உபரிப் பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு மிகக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யப்படும்.
இதனால் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியாளர்களால் விலை போட்டியைச் சமாளிக்க முடியாமல் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்படும் அது பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.
சீனா மீதான சந்தேகம்:
சீன நிறுவனங்கள் தங்களது மூலப்பொருட்கள் (API, சோலார், எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள்) மற்றும் முதலீடுகளை இந்தியா, வியட்நாம் போன்ற மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பி, அங்கு இறுதிப் பொருளாக மாற்றி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதாக ட்ரம்ப் நிர்வாகம் சந்தேகிக்கிறது. இதைச் சீனாவின் மறைமுக ஏற்றுமதியாகவே அமெரிக்கா பார்க்கிறது.
இந்தியாவின் அடுத்து நகர்வு:
அமெரிக்காவின் இந்தப் புதிய வரிவிதிப்பு உடனடியாக அமலுக்கு வரவில்லை. பொதுமக்கள் கருத்துக் கேட்பு 2027 ஜனவரி 5 வரையிலும், ஜனவரி 25-ல் பொது விசாரணையும் நடைபெறவுள்ளது. இந்தியா, அமெரிக்காவுடன் ஒரு ‘பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தை’ எட்டினால், 25 சதவீத வரிக்குப் பதிலாக 17 சதவீத வரியை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் மியாமியில் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ள ஜி20 (G20) உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது. இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரிய நிவாரணம் கிடைக்கக் கூடும்.