லண்டன்: இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா நிறுவனம், பிரிட்டன் சந்தையில் நுழைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் அக்னி 4என் ஸ்மார்ட்போன் லண்டனில் அண்மையில் அறிமுகமானது.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
இந்த சூழலில் லாவா நிறுவனம் பிரிட்டன் ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்துள்ளது. இது அந்நிறுவனத்தின் சர்வதேச பயணத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் ரெய்னா கூறியதாவது:
“லாவா நிறுவனம் பிரிட்டன் ஸ்மார்ட்போன் சந்தையில் வர்த்தகத்தை தொடங்கி உள்ளது. இது எங்கள் நிறுவனத்தின் சர்வதேச பயணத்தில் மிக முக்கியமானது. பிரிட்டன் பயனர்களுக்கு வித்தியாசமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை கொண்டு வரை விரும்புகிறோம். உயர்மட்ட செயல்திறன், துல்லியமான மென்பொருள் பயன்பாடு, ஏஐ அம்சங்கள் உள்ளிட்டவற்றை சமரசமின்றி வழங்க விரும்புகிறோம். சிறந்த பொருளை குறைந்த விலையில் பெற பிரிட்டன் மக்கள் விரும்புகிறார்கள் என நாங்கள் கருதுகிறோம்” என்று சுனில் ரெய்னா தெரிவித்துள்ளார்.
லாவா அக்னி 4என் சிறப்பு அம்சங்கள்
6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி, 66 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட், மீடியாடெக் டிமான்சிட்டி 8350 சிப்செட், 8ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம், இரண்டு இயங்குதள அப்டேட், 50+8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா, 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா இதில் உள்ளது. இந்த போனின் விலை 499 பவுண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 4-ம் தேதி முதல் இந்த போன் விற்பனையாக உள்ளது.