திருப்பூர்: போலி கடன் செயலிகள் மூலமாக சிறிய கடன்களை பெற்றுவிட்டு, அதனைக் கட்ட முடியாமல் திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்கு செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் வெளியூர் மட்டுமின்றி வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்தை வீட்டு வாடகை, உணவு, குடும்பத்தினருக்கு அனுப்பிவைப்பது என செலவிட்டு வருகின்றனர். உணவு, உடை உள்ளிட்ட சிறு தேவைகளுக்கு பணம் தேவைப்படும்போது முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆவணம் இல்லாமல் உடனடியாக கடன் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி போலி கடன் செயலிகளை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்கின்றனர்.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் கேட்கப்படும் ஆதார் அட்டை, பான்கார்டு உள்ளிட்ட விவரங்களை அனுப்புகின்றனர். மேலும், 5 உறவினர்களின் செல்போன் எண்களைக் கேட்கின்றனர்.
இதற்கு தங்களது தாய், தந்தை, மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 5 பேரின் எண்களை கொடுத்தவுடன், அதனை சரிபார்த்து அந்த எண்கள் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருப்பதை செயலி உறுதி செய்து கொள்ளும். இதன் பின்னர் செல்ஃபி மூலமாக புகைப்படத்தை எடுத்து அனுப்பியவுடன், வங்கி கணக்கு எண்ணைக் கேட்கத் தொடங்கும்.
தொழிலாளர்கள் ரூ.3 ஆயிரம் கடன் கேட்டிருந்தால் செயல்முறை கட்டணம், ஜிஎஸ்டி, பாதுகாப்பு முன்தொகை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் கட்டணங்களைப் பிடித்தம் செய்து விட்டு சுமார் ரூ.1,800 முதல் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும்.
இதுதொடர்பாக தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட செயலியில் சென்று புகார் ஏதும் செய்ய முடியாது. கடனை திருப்பி செலுத்த வேண்டிய தேதிக்கு ஒரு நாள் முன்பாக கணினியில் இருந்து ‘வாட்ஸ்அப் கால்’ மூலமாக வட மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் அழைப்பு விடுத்து கடனை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என்று தெரிவிப்பார்கள்.
அதன்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்வேறு எண்களில் வாட்ஸ்அப் அழைப்பு மூலமாக கடன் பெற்ற நபர்களைத் தொடர்ந்து அழைத்து துன்புறுத்துவார்கள்.
அதிலும் குறிப்பாக 3 முதல் 5 நாட்கள் அவகாசத்தில் கூடுதல் அபராதத்துடன் தொகையை செலுத்தாவிட்டால், அவர்கள் கொடுத்துள்ள உறவினர்கள், நண்பர்களின் செல்போன் எண்களையும் தொடர்பு கொண்டு கடன் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என மிரட்டல் விடுவார்கள்.
மார்பிங் புகைப்படங்கள்
அப்போதும் பணத்தை செலுத்தவில்லை என்றால், கடன் பெற்றவரின் புகைப்படத்தை ஆதார் அட்டையில் இருந்து எடுத்து மார்பிங் முறையில் ஆபாசமாக சித்தரித்து அதனை கடன் பெற்றவருக்கு முதலில் அனுப்பி மிரட்டல் விடுக்கின்றனர்.
வேறு வழியின்றி நண்பர்கள், உறவினர்களிடமிருந்து கடனாகப் பெற்று கூடுதல் அபராதத்துடன் தொகையை பெரும்பாலான தொழிலாளர்கள் ‘கியூ ஆர்’ குறியீடு மூலமாக செலுத்தி விடுகின்றனர்.
அவ்வாறு பணம் செலுத்திய பின்னரும், ‘நீங்கள் அனுப்பிய பணம் எங்களது வங்கிக் கணக்கில் வந்து சேரவில்லை. மீண்டும் ஒரு முறை பணம் அனுப்புங்கள்’ என்றும், ‘இருமுறை பணம் வந்திருந்தால் சில மணி நேரத்திலேயே உங்களது வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்’ என்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிப்பார்கள்.
சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படம் வெளியே வந்து விட்டால் அவமானம் என்பதற்காக பெரும்பாலானவர்கள் மீண்டும் ஒரு முறை கடன் பெற்று பணத்தை செலுத்தி விடுகின்றனர்.
பணம் செலுத்தாவிட்டால் உறவினர்களுக்கு அவரது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை அனுப்பி, வாட்ஸ் அப் கால் மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுக்கின்றனர்.
இதன் காரணமாக ஒரு சில இடங்களில் போலி செயலிகளில் கடன் பெற்ற தொழிலாளர்கள் அவமானம், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அண்மைக்காலமாக திருப்பூரில் அதிகரித்துள்ளன.
‘மிரட்டல் விடுத்தால் புகார் தெரிவிக்கலாம்’
திருப்பூர் சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது: தொழிலாளர்கள் செயலிகளில் கடன் பெறும்போது ரிசர்வ் வங்கியால் அந்த செயலி அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். கடன் பெறுபவரின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள், எஸ்எம்எஸ், கேமரா, இருப்பிடம் போன்றவற்றுக்கான அனுமதியைக் கொடுக்கக்கூடாது.
போலி செயலி மூலமாக கடன் பெற்று மார்பிங் முறையில் ஆபாசமாக புகைப்படங்களைப் பதிவிடுவது, மிரட்டல் விடுவது, இன்ஸ்டாகிராம், முகநூல் ஆகியவற்றில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்தால் உடனடியாக தகுந்த ஆவணங்களுடன் சைபர் கிரைமில் புகார் அளிக்கலாம்.
அதனை விட்டுவிட்டு மன உளைச்சலால் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்கு கடன் பெற்ற நபர்கள் செல்லக்கூடாது. திருப்பூரில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் புகார் கொடுக்க பெரும்பாலானவர்கள் முன்வருவதில்லை.
ஆகவே,தொழிலாளர்கள் முடிந்தவரை ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள், வங்கிகள் மூலமாக நிபந்தனைகளை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே கடன் பெற வேண்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி போலி செயலிகளில் கடன் பெற்று ஏமாறக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.