நைரோபி: கென்யாவின் காஜியாடோ பகுதியில் அமைந்துள்ள மகோடி ஏரியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இயங்கி வரும் இந்திய நிறுவனமான டாடா, அப்பகுதிக்குத் தேவையான தொழிற்சாலைகளையோ, வேலைவாய்ப்புகளையோ அல்லது உள்கட்டமைப்பு வளர்ச்சியையோ வழங்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காஜியாடோ பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பயணத்தின் போது பேசிய அதிபர் ரூட்டோ, “டாடா நிறுவனம் 100 ஆண்டுகளாக கென்யாவுடன் ஒப்பந்தம் வைத்துள்ளது. ஆனால், காஜியாடோவில் அவர்கள் எந்தவொரு தொழிற்சாலையையும் கட்டவில்லை.
நமது நாட்டின் இயற்கை வளங்களை வெறும் மூலப்பொருளாக ஏற்றுமதி செய்ய நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல. இங்கு புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து, இங்கேயே கண்ணாடியும் கெமிக்கல்களும் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதேவேளையில், அதிபரின் இந்த முடிவுக்குக் கென்யாவின் ஜனநாயகக் குடிமக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகோடி ஏரிப் பகுதியில் பல லட்சம் கோடி மதிப்பிலான லித்தியம் உலோகப் படிமங்களும், கச்சா எண்ணெய் வளங்களும் இருப்பதாகவும், தனது சுயநல வியாபார நலன்களுக்காகவே டாடா நிறுவனத்தை அதிபர் ரூட்டோ வெளியேற்ற முயல்வதாகவும், டாடா நிறுவனத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டால் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜூலை மாத இறுதியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சோடா சாம்பல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குக் கென்ய அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது அதிபரின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மகோடி சோடா நிறுவனத்தை, கடந்த 2005-ம் ஆண்டில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கைப்பற்றி நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.