சேலம் லீ பஜார் பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள வெல்ல மூட்டைகள். படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், வெள்ளாளப் பட்டி, சிக்கனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் 30 கிலோ சிப்பங்களாக அடைக்கப்பட்டு, செவ்வாய்ப்பேட்டை அருகே உள்ள தினசரி சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் சந்தையில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், வெல்லம் விலை கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ. 4 வரை குறைந்து, நேற்று கிலோ ரூ.65-க்கு விற்பனையானது.
இதுகுறித்து சேலம் நகர வெல்லம் வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஜெய்சங்கர் கூறியதாவது: வெல்லம் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் வறட்சி காரணமாக கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டதால், வெல்ல உற்பத்தியும் குறைந்தது. இதனால் சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50 ஆக இருந்த வெல்லத்தின் விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த வாரம் ரூ.69 வரை சென்றது.
சில வாரங்களுக்கு முன்பு வரை சேலம் சந்தைக்கு தினமும் 3,400 முதல் 4,000 சிப்பங்கள் வரை வெல்லம் விற்பனைக்கு வந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு சுமார் 2,000 சிப்பங்கள் மட்டுமே வருகின்றன. வெல்லத்தின் விலை உயர்ந்ததால், அதை மூலப்பொருளாகக் கொண்டு பர்பி, மிட்டாய் உள்ளிட்ட இனிப்புகளைத் தயாரிக்கும் தொழிலாளர்கள், தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் வெல்லத்தின் விற்பனையும் சரிந்துள்ளது. இதன் காரணமாக நேற்று வெல்லம் கிலோ ரூ.65-க்கு விற்பனையானது. இந்நிலையில், அடுத்த சில வாரங்களில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வருவதால், வெல்லத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளது என்றார்.