முதல்வர யோகி ஆதித்யநாத்| கோப்புப் படம் 

 
வணிகம்

உத்தரப் பிரதேசம் உண்மையிலே வருவாய் உபரி மாநிலமா? - தரவுகளும், சில தகவல்களும்

போத்தி ராஜ்.க

“கடந்த 9 ஆண்டுகளில் ‘பின்தங்கிய மாநிலம்’ என்ற நிலையில் இருந்து இன்று வருவாய் உபரி மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக ‘இரட்டை இன்ஜின்’ அரசாங்கம் வழங்கிய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பான சூழலால் உத்தரப் பிரதேசம் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வர வழிவகுத்துள்ளது” - கடந்த மாதம் 24-ம் தேதி பெங்களூருவில் நடந்த முதலீட்டாளர்களுக்கான ரோட் ஷோ நிகழ்ச்சியில் மிக உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் உத்தரப் பிரதேச முதல்வர யோகி ஆதித்யநாத் பேசிய வார்த்தைகள் இது.

அதற்கு ஏற்றார்போல், மத்திய கணக்குத் தணிக்கை தலைமை அதிகாரி கே.சஞ்சய் மூர்த்தியும் கடந்த மாதம் 16-ம் தேதி, ‘2024-25ம் ஆண்டுக்கான மாநிலங்கள் நிதிநிலை’ குறித்த மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை, வருவாய் உபரிகள் குறித்து அறிக்கை வெளியிட்டியிருந்தார்.

அதில் ‘உத்தரப் பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 9 மாநிலங்கள் 2024-25-ம் நிதியாண்டில் வருவாய் உபரி மாநிலங்களாக இருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாநிலத்தின் முகம் மாறியுள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் யோகி ஆதித்யநாத் பெங்களூருவில் பேசும்போது, தனது மாநிலம் வருவாய் உபரியாக இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.

வருவாய் உபரியாக இருக்கும் 13 மாநிலங்களில் அதிகபட்ச வருவாய் உபரியைக் கொண்டுள்ளது உத்தரப் பிரதேசம் மட்டும்தான். 2024-25-ம் ஆண்டில் 13 மாநிலங்களின் ஒட்டுமொத்த உபரி வருவாயான ரூ.1.27 லட்சம் கோடியில், ரூ.59,327 கோடி உபரியை உத்தரப் பிரதேசம் கொண்டுள்ளது.

ஆய்வு சொல்வது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலத்தின் வருவாய் உபரி நிலை குறித்து தலைமைக் கணக்கு தணிக்கையாளர், ரிசர்வ் வங்கி ஆகியவை அளித்த அறிக்கையை ஆய்வு செய்தபோது, இந்த உபரி நிலை என்பது வருவாயில் ஏற்பட்ட எழுச்சிமிக்க வளர்ச்சி இல்லை அல்லது வரவேற்கத்தக்க நிதி ஒழுக்கத்தின் விளைவும் இல்லை. மாறாக, பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட செலவிடாமல் இருந்து, அதனால் வந்த உபரியாகக் காட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.

அதாவது, வரி வருவாயைப் பெருக்காமல், திட்டங்களுக்கு செலவு செய்யும் தொகையைக் குறைத்து உபரியாகக் காட்டுவதாகும் என்று ‘தி இந்து’ ஆங்கிலம் வெளியிட்ட செய்திக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலம், மூன்றாவது பெரிய மாநிலப் பொருளாதாரம், அதிக மதிப்புள்ள மிகப் பெரிய பட்ஜெட், அதிகபட்ச வருவாய் உபரி மற்றும் மத்திய அரசிடமிருந்து அதிகபட்ச நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் எப்படி உபரி வருவாயைக் கொண்டுள்ளது எனப் பார்க்கலாம்.

உண்மையில் உ.பி. நிலை என்ன?

நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிதிப் பற்றாக்குறை இருந்தால், அது தவறில்லை. ஆனால், அரசுக்கு வரக்கூடிய வரி வருவாய் இனங்களைவிட, செலவிடும் தொகை அதிகமாக இருந்தால், அது வருவாய் பற்றாக்குறை. இது மோசமான நிதி ஒழுக்கமாகும்.

இந்த அளவுகோல்களின்படி, அதிக வருவாய் உபரி மற்றும் நிர்வகிக்கக் கூடிய நிதிப் பற்றாக்குறையை உத்தரப் பிரதேசம் அரசு 2024-25ம் ஆண்டில் வைத்துள்ளது. நாட்டின் முதல் 10 மாநிலங்களின் பொருளாதாரம், வருவாய் மற்றும் நிதி நிலையோடு ஒப்பிடுகையில், உத்தரப் பிரதேசம், ஏறக்குறைய ரூ.59,000 கோடி உபரி வருவாயாக வைத்திருக்கிறது. 2-வது இடத்தில் ஒடிசா ரூ.22,561 கோடி, குஜராத் ரூ.18,943 கோடி உபரி வைத்துள்ளன.

குறைவான மூலதனச் செலவு

உத்தரப் பிரதேசத்தின் வருவாய் மற்றும் நிதிக் குறியீடுகள் அந்த மாநிலத்தை உபரி வருவாய் கொண்ட மாநிலமாக சித்தரித்தாலும், உண்மையில் அந்த அரசு பட்ஜெட்டில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கூட முழுமையாகச் செலவிடவில்லை என்பதுதான் நிதிர்சனம்.

ஒரு மாநிலம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட, சில நேரங்களில் கூடுதலாக செலவிட்டு திருத்தப்பட்ட செலவின அறிக்கையை நிதியாண்டின் பிற்பகுதியில் அறிவிக்கும்.

ஆனால், உத்தரப் பிரதேச மாநில அரசு தனது மொத்த பட்ஜெட்டில் மூலதனத்துக்காக ஒதுக்கப்பட்ட செலவைக் கூட முழுமையாக செலவிடாமல் விலகியுள்ளது. அதாவது, 2024-25 ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 17.7% செலவிடாமல் வைத்துள்ளது.

உ.பி.யின் பிரச்சினை என்ன?

கடந்த 10 ஆண்டுகளின் பட்ஜெட் புள்ளிவிவரங்களை எடுத்து ஆய்வு செய்தால், உத்தரப் பிரதேச அரசு பட்ஜெட் நிதியை முழுமையாக செலவிடவில்லை என்பது தெரிய வருகிறது. இது மோசமான பட்ஜெட் நிர்வாகத்தையும், ஒதுக்கப்பட்ட தொகையைக் கூட செலவிட முடியாத இயலாமையுடன் இருப்பதைக் காட்டுகிறது.

கடந்த 2019-20-ம் ஆண்டில் இருந்து உத்தரப் பிரதேச அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில், குறைந்தபட்சம் 15% முதல் 20 சதவீதம் வரை செலவிடாமல் (underspent) இருந்துள்ளது.

மகாராஷ்டிரா Vs உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேச பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள வரவு மற்றும் செலவினங்களோடு ஒப்பிடும்போது, அதற்கு ஈடான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள மாநிலம் மகாரஷ்டிராதான். இரு மாநிலங்களின் பொருளாதாரம், வருவாய், செலவினங்களை ஒப்பிடும்போது, உத்தரப் பிரதேசத்தின் உபரி வருவாய் என்பது வரி வருவாய் எழுச்சியால் அல்ல, திட்டங்களுக்கு குறைவாகச் செலவிட்டு மிச்சம் செய்ததால் வந்த உபரியாகும்.

2024-25-ம் ஆண்டு புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டால், உத்தரப் பிரதேசத்தின் பட்ஜெட்டில் ரூ.6,06,802 கோடி வரி வருவாய் மதிப்பிடப்பட்டது. ஆனால், உண்மையில் ரூ.5,10,213 கோடிதான் கிடைத்தது.

பட்ஜெட்டில் குறிப்பிட்ட வருவாய் செலவினம் ரூ.5,32,565 கோடி என கணிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் செலவிட்டது ரூ.4,50,886 கோடிதான். அதாவது, ரூ.5,10,213 – ரூ.4,50,886 = ரூ.59,327 கோடி வருவாய் உபரியாக வைத்துள்ளது. அதாவது, குறைவாக செலவிட்டு, உபரியாக காண்பித்துள்ளது உத்தரப் பிரதேச அரசு.

ஆனால், மகாராஷ்டிரா பட்ஜெட் வரி வருவாய் மதிப்பு ரூ.4.99 லட்சம் கோடி. உண்மையில் வரி வருவாய் 4.81 லட்சம் கோடி. மாநிலத்தின் வரி வருவாயில் செலவிட திட்டமிடப்பட்டது ரூ.5.19 லட்சம் கோடி. ஆனால், உண்மையில் செலவிட்டது ரூ.5,11,901 கோடி. அதாவது(4,81,906 கோடி - ரூ.5,11,901 கோடி = ரூ.29,995 கோடி பற்றாக்குறை).

மூலதனச் செலவுக்கு முக்கியத்துவமின்மை

ஓர் அரசு குறைவாக மூலதனச் செலவு செய்தால், நீண்டகால பொருளாதார வளர்ச்சி தடைபடுவதுடன், உள்கட்டமைப்பு பற்றாக்குறை, வேலையின்மை அதிகரிப்பு மற்றும் நாட்டின் உற்பத்தி திறன் வீழ்ச்சி போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும்.

உத்தரப் பிரதேச அரசு வருவாய் உபரி கொண்டுவர செலவுகளைக் குறைத்தாக காண்பித்தாலும், மூலதனச் செலவுக்காக, பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட நிதியைக் கூட செலவிடவில்லை. 2024-25-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மூலதனச் செலவுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1.55 லட்சம் கோடியில் ரூ.41,800 கோடிதான் செலவிடப்பட்டது; 27% நிதி செலவிடவில்லை.

மிகக் குறைந்த மேம்பாட்டு செலவு ஆர்பிஐ அறிக்கையின்படி,2024-25-ம் நிதியாண்டில் நாட்டின் முதல் 10 பெரிய மாநிலங்களில் தனிநபர் செலவினத்தோடு ஒப்பிடுகையில், உத்தரப் பிரதேசத்தின் தனிநபர் மேம்பாட்டுச் செலவு மிகக் குறைவாக (ரூ.10 ஆயிரம்) இருக்கிறது. மகாராஷ்டிரா (ரூ.25 ஆயிரம்), தமிழகம் (ரூ.23 ஆயிரம்), கர்நாடகா (ரூ.28 ஆயிரம்), தெலங்கானா (ரூ.30 ஆயிரம்) என இருக்கையில், குறைவாக இருக்கிறது உத்தரப் பிரதேசம்.

மத்திய அரசை அதிகம் சார்ந்திருத்தல்

ஒவ்வொரு ஆண்டும் உத்தரப் பிரதேச அரசு வருவாயில் உபரியை பதிவு செய்ய முக்கியக் காரணம், மத்திய அரசின் நிதியாகும். மாநிலத்தின் மொத்த வருவாயில், மத்திய அரசின் பங்கு 50% இருக்கிறது.

2020-21-ம் ஆண்டிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் மொத்த வருவாயில் மத்திய அரசின் பங்கு 55 சதவீதத்துக்கும் குறையாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. மத்திய அரசிடம் இருந்து அதிகமான நிதி பெறும் மாநிலங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது.

இருப்பினும், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட நிதியை செலவிட முடியாமல் திறனற்று இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு செலவிட 2024-25-ம் ஆண்டில் பட்ஜெட்டில் ரூ.99,197 கோடி ஒதுக்கி, அதில் 38.4 சதவீதம் குறைவாக, ரூ.65,0000 கோடிதான் செலவிட்டது.

வித்தியாசமான நிதிநிலை

2024-25-ம் நிதியாண்டில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவிடவேண்டும் என்று அறிவிக்கப்பட்டதைக் கூட முழுமையாக உத்தரப் பிரதேச அரசு செலவிடவில்லை என்பதுதான் நிதர்சனம். வருவாயில் முதலீட்டு செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், செலவு செய்யாமல் இருக்கும் பணம் என்பது நிதிப் பற்றாக்குறையை விட இரு மடங்கு இருக்கிறது.

2024-25 நிதியாண்டில் உத்தரப் பிரதேசம் செலவு செய்யாமல் இருந்த பணம் ரூ.1.23,430 கோடி. ஆனால், நிதிப் பற்றாக்குறை ரூ.62,258 கோடியாகும். இந்த நிதியாண்டில் செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்க பட்ஜெட்டில் திட்டமிட்டாலும், இறுதியில் முழுமையாகச் செலவிட முடியாத நிலைதான் இருக்கிறது. ஆகவே, உண்மையில் ‘உத்தரப் பிரதேச அரசு வருவாய் உபரி மாநிலமாக இருப்பது கானல் நீரா?’ என்ற கேள்வியும் எழுகிறது.

SCROLL FOR NEXT