1965-ல் நாட்டின் உணவுப் பஞ்சத்தைப் போக்க அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ‘ஒருவேளை உணவைத் தியாகம் செய்யுங்கள்’ என அழைப்பு விடுத்தார். 2026-ல் அந்நியச் செலாவணியைக் காக்க ‘ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தள்ளிப் போடுங்கள்’ எனப் பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள், அதேபோன்றதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? உண்மைதான் என்ன?
இந்தியப் பெண்களின் மனதையும், நகைக் கடைகளின் வாசலையும் ஒருசேரக் கட்டிப்போட்டது எது? - பிரதமர் மோடியின் உருக்கமான வேண்டுகோளா, அல்லது உச்சம் தொட்ட தங்கத்தின் விலையா? இந்தக் கேள்விதான் இப்போது மில்லியன் டாலர் விவாதம்.
ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி 40 சதவீதம் சரிந்திருப்பதும், உச்சத்தில் இருந்த தங்கம் விலை கணிசமாக இறங்கியிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.
தங்கம் விலை சரிந்ததும் சாமானியர்களுக்கு ஆறுதல் அளித்தாலும், அதன் கிரெடிட்டை யார் எடுத்துக்கொள்வது என்பதில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தங்கம் விலை சரிந்ததற்குக் காரணம் மோடியின் குரலா, இல்லை உலகச் சந்தையின் சுழற்சியா?
பிரதமர் மோடியின் வேண்டுகோளும் பின்னணியும்
லக்னோவில் நடைபெற்ற 5-வது கவுசால் தீக்சாந்த் சமாரோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த நவம்பர் 21-ம் தேதி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த மே மாதம் 10-ம் தேதி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஓர் ஆண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுங்கள்; தேவை ஏற்பட்டால் மட்டும் வாங்குங்கள் என்று கூறியிருந்தேன். மக்கள் என் கோரிக்கையை ஏற்றுக் குறைவான தங்கத்தை வாங்கியிருக்கிறார்கள். அந்நியச் செலாவணியும் மிச்சப்பட்டது. தங்கம் விலையும் குறைந்திருக்கிறது. 1965-ல் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது லால் பகதூர் சாஸ்திரி ஒருவேளை உணவைத் தியாகம் செய்யச் சொன்னது போலத்தான் நானும் மக்களிடம் கேட்டிருந்தேன்” எனத் தெரிவித்தார்.
தங்கம் விலை சரிவும் சர்வதேசக் காரணங்களும்
2026 ஜனவரி மாதத்தில் இருந்தே தங்கம் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் (28.35 கிராம்) கடந்த ஜனவரியில் 5,594.82 டாலராக (ரூ.5,19,546) இருந்த நிலையில், நவம்பர் 16-ல் 3,830 டாலராக (ரூ.3,55,661) குறைந்தது.
சென்னையில் நவம்பர் 25-ல் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூபாய் 295 குறைந்து ரூபாய் 11,420 ஆகவும், ஒரு பவுன் விலை ரூபாய் 2,360 குறைந்து ரூபாய் 91,360 ஆகவும் விற்பனை ஆனது. கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூபாய் 14 ஆயிரத்துக்கு மேலாக ஆபரணத் தங்கம் விலை குறைந்ததை கவனிக்க வேண்டும்.
அதேவேளையில், மோடியின் மே மாத வேண்டுகோளுக்குப் பல மாதங்களுக்கு முன்பே சர்வதேச அளவில் தங்கம் விலை சரிவு தொடங்கியிருந்தது கவனிக்கத்தக்கது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிய முக்கியக் காரணங்கள்:
> அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியதும், மேலும் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களைத் தங்கத்திலிருந்து வங்கி மற்றும் பிற திட்டங்களுக்கு மாற்றியது.
> உலகளவில் தங்கம் டாலரில்தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலர் வலுவடைந்ததால், பிற நாட்டுக் கரன்சிகள் மூலம் தங்கம் வாங்குவது கடினமாகித் தேவை குறைந்தது.
> ஸ்திரத்தன்மையற்ற சந்தைகளில் இருந்து முதலீடுகளைத் திரும்பப் பெற்ற உலக முதலீட்டாளர்கள், தங்கத்தை விற்று அதிக வட்டி லாபம் தரும் பங்குப் பத்திரங்கள் மற்றும் டாலரில் முதலீடு செய்தனர்.
இவற்றின் தாக்கமே இந்தியாவிலும் விலை குறையக் காரணமாக அமைந்தது. இந்தியாவில் இறக்குமதி குறைந்ததால் மட்டுமே சர்வதேச அளவில் தங்கம் விலை சரியவில்லை.
இறக்குமதி சரிவு, வரி உயர்வு மற்றும் நுகர்வோர் மனநிலை
மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் உலகத் தங்க கவுன்சில் (World Gold Council) அறிக்கைகளின்படி, ‘2025 ஏப்ரல் - அக்டோபரில் 41.24 பில்லியன் டாலராக இருந்த தங்கம் இறக்குமதி, 2026-ல் 40% சரிந்து 24.78 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது (மதிப்பு ரீதியாக ரூ.6.7 லட்சம் கோடியில் இருந்து ரூ.2.3 லட்சம் கோடியாகக் குறைவு).அக்டோபர் மாத இறக்குமதி மட்டும் 14.72 பில்லியன் டாலரிலிருந்து 5.51 பில்லியன் டாலராக (62.5% சரிவு) வீழ்ச்சியடைந்துள்ளது.
2025-26-ல் 71.98 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி, நடப்பு நிதியாண்டில் 35 முதல் 40 பில்லியன் டாலருக்குள் (45–50% சரிவு) குறையக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதியைக் கட்டுப்படுத்த மே 12-ம் தேதி தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை 6%-லிருந்து 15% ஆக மத்திய அரசு உயர்த்தியது. ஏற்றுமதி சார்ந்த தங்க இறக்குமதி விதிகளும் கடுமையாக்கப்பட்டன. திடத் தங்கத்துக்கு பதிலாகத் தங்கப் பத்திரங்கள் (SGB) மற்றும் பொதுத்துறைப் பத்திரங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்பட்டது.
உலகத் தங்க கவுன்சிலின் 3-ம் காலாண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் தங்கத் தேவை கடந்த ஆண்டைவிட 29% குறைந்துள்ளது (நகைத் தேவை 20% சரிவு, கட்டி மற்றும் நாணயங்கள் தேவை 40% சரிவு). இருப்பினும், 2-வது காலாண்டைவிட 3-வது காலாண்டில் தேவை 24% உயர்ந்து 162.5 டன்னாக உள்ளது.
மே மாத வரி உயர்வால் விலை உச்சத்தைத் தொட்டதும், பணவீக்க அழுத்தமும் மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்தன. இதனால் மக்கள் புதிய நகைகள் வாங்குவதைத் தவிர்த்து, பழைய நகைகளைக் கொடுத்துப் புதிய நகைகளாக மாற்றும் போக்கு அதிகரித்தது. மோடியின் வேண்டுகோளும், பருவகால மந்தநிலையும் ஓர் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், 15% வரி உயர்வும் விலைவாசியுமே இறக்குமதி சரிவுக்கு முதன்மைக் காரணங்கள் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாஜக - காங்கிரஸ் மோதல்
தங்கம் விலை கிலோவுக்கு ரூ.1.90 கோடியில் இருந்து ரூ.1.25 கோடியாக (ரூ.65 லட்சம் சரிவு) இறங்கியதால், முன்கூட்டியே அதிக விலைக்கு இருப்பு வைக்காமல் தவிர்த்த நகை வியாபாரிகள் பெரும் நஷ்டத்திலிருந்து தப்பியதாக வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (CTI) தெரிவித்துள்ளது.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மக்கள் குறைவாக வாங்கியதாக CAIT மற்றும் நகை வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் சங்கங்கள் கூறுகின்றன. பாஜக எம்.பி. கண்டேல்வால் இது மோடியின் பேச்சுக்குக் கிடைத்த மரியாதை எனப் பாராட்டினார்.
மறுபுறம், விலைவாசி உயர்வும், 15% வரிச் சுமையும்தான் மக்களைத் தடுத்தன எனப் பதிலடி கொடுத்துள்ளது காங்கிரஸ் தரப்பு. ‘பிரதமர் மோடியா தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறார்? லால் பகதூர் சாஸ்திரியின் தியாகமும் வேண்டுகோளும் வேறு; மோடியின் வாழ்க்கை முறையும் வேண்டுகோளும் வேறு. அவரின் பேச்சுக்கும் தங்கம் விலை குறைந்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கடுமையாக விமர்சித்துள்ளார்.