வணிகம்

வீட்டுக் கடன், வாகனக் கடன் பெறுவது இனி கடினமா? - ‘சிபில்’ கெடுபிடியும், ஆர்பிஐ விதிகளும்

போத்தி ராஜ்.க

வாடிக்கையாளர்களின் நலன்களுக்காகவும், வங்கிகளை கடன் பிரச்சினையில் சிக்காமல் தவிர்க்கவும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது புதிய விதிகளை அறிமுகம் செய்வதுடன் ஏற்கெனவே இருக்கும் விதிகளில் மாற்றமும், திருத்தமும் செய்வது வழக்கம். அந்த வகையில் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சிபில் (CIBIL) ஸ்கோரில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை அளவுகோலாக வைத்து கடன் வழங்க ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வகுத்துள்ளது.

இதன்படி, வங்கி வாடிக்கையாளர் ஒருவருக்கு குறைந்தபட்சம் சிபில் ஸ்கோர் 730 இருந்தால்மட்டுமே வீட்டுக் கடன், வாகனக் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலிக்க முடியும். சிபில் ஸ்கோர் 730-க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் கடன் பெறுவதை கடினமாக்கும் வழிமுறைகளை முடிவு செய்துள்ளது.

இந்த புதிய விதிகள் 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் வங்கிகளில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குவோர் நிலை குறித்தும், அவர்களின் திருப்பிச் செலுத்தும் தன்மை, திறன் ஆகியவற்றை அறிந்து வங்கிகள் கவனத்துடன் கடன் வழங்க இந்த விதிகளால் முடியும். வீட்டுக் கடன், வாகனக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டிலிருந்து தீவிரமாக ஆய்வு செய்யப்படும்.

புதிய விதிகள் எதற்காக?

இந்தியாவில் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினைதான் ‘வாராக் கடன்’ (என்பிஏ). இந்த சிக்கலில் இருந்து வங்கிகளை மீட்கும் வகையில் புதிய நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.

சில நேரங்களில் வாடிக்கையாளர்களின் தன்மை அறியாமல், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அறியாமல் வங்கிகள் கடன் அளிக்கின்றன. ஆனால், வாடிக்கையாளர்களில் சிலரால் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது அது வாராக் கடனாக மாறிவிடுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு நடவடிக்கைகள், விதிகளால் வங்கிகளின் வாராக் கடன் குறைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வங்ககளின் வாராக்கடன் ரூ.10.36 லட்சம் கோடியாக இருந்த நிலையில், படிப்படியாகக் குறைக்கப்பட்டு 2026-ம் ஆண்டில் அது ரூ.4.18 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வாராக் கடன் அளவை மேலும் குறைக்கவும், கடன் வழங்கும் முறையை சீரமைக்கவும்தான் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் பெறுவதை ரிசர்வ் வங்கி கடினமாக்குகிறது.

ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிகளால் வங்கிகள் தங்களுக்கு நேரும் தவறுகளை முன்கூட்டியே அறிந்து, மதிப்பிட முடியும், வாடிக்கையாளர்களின் பணத்தையும் பாதுகாப்பாக வைக்க முடியும். எதிர்காலத்தில் ஏற்படப் போகும் இழப்பை அறிந்து இப்போதே வங்கிகள் தங்களை தயார் செய்யவும் முடிகிறது.

வங்கிகளின் இந்த பாதுகாப்பான அணுகுமுறை நிதி அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேசமயம், பொருளாதாரத்தில் கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகள் ஏற்படும்போது அதில் பொருளாதார வளர்ச்சியையும், வங்கிகளின் லாபத்தையும் பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிபில் (CIBIL) ஸ்கோர் முக்கியமா?

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் கடன் பெறுவதற்கு அவர் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதும், வர்த்தகராகவோ அல்லது தொழில் நடத்துபவராகவோ இருந்தால் எவ்வளவு தொகை பணப்வர்த்தனை, வர்த்தகம் செய்கிறார், அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதெல்லாம் முக்கியம் அல்ல.

இதுபோன்ற அம்சங்களை ஆய்வு செய்வதைவிட, வங்கிகள் தற்போது கடன் கேட்க வரும் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோரைத்தான் ஆய்வு செய்கின்றன.

சிபில் ஸ்கோர், அதாவது கடன் பெற்று அந்த கடனை உரிய தேதியில் திருப்பிச் செலுத்தும் நபராக இருந்தால் அவரின் மதிப்பெண் உயர்ந்திருக்கும். அவ்வாறு சிறந்த மதிப்பெண் வைத்திருக்கும் வாடிக்கையாளருக்குத்தான் வங்கிகள் கடன் வழங்க முன்னுரிமை வழங்குகின்றன.

அதேசமயம், குறைந்த சிபில் மதிப்பெண் வைத்திருக்கும் வாடிக்கையாளர், நல்ல வாடிக்கையாளராக இருந்தாலும், சிறந்த பணப்பரிவர்த்தனை செய்திருந்தாலும், அவருக்கு கடன் வழங்குவது கடினமாகும்.

அவ்வாறு சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் வாடிக்கையாளருக்கு கடன் அவசியம் கொடுக்க வேண்டிய சூழல் இருக்கும் பட்சத்தில் கூடுதலாக பிணையம், பிணையதாரர் சொத்து மதிப்பு, அதிகபட்ச வட்டி ஆகியவற்றை வங்கிகள் விதித்துதான் கடன் வழங்குவதை பரிசீலிக்கின்றன.

அந்த வகையில் ரிசர்வ் வங்கி வகுத்துவரும் விதிமுறைகளில் சிபில் ஸ்கோர் 730-க்கு குறைவாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வாகனக் கடன், கல்விக் கடன், வீட்டுக்கடன் வழங்குவது கடினமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், வாடிக்கையாளர்களிலும், தொழில் துறையினரிலும் 62 சதவீதம் பேரின் சிபில் ஸ்கோர் ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் 730 மதிப்பெண்களுக்கும் குறைவாக இருக்கிறது. இந்த விதிகள் 2027-ம் ஆண்டு ஏப்ரலில் நடைமுறைக்கு வந்தால், வீட்டுக் கடன், வாகனக் கடன் பெறுவது கடினமாகும்.

ஏன் இந்தக் கட்டுப்பாடு?

வங்கிகளைப் பொறுத்தவரை பணத்தை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்காகவும், வாராக் கடனிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், வலிமையான, ஸ்திரமான, நம்பிக்கையான கடன்பெறுவோரைக் கண்டறியவை இந்த கட்டுப்பாடுகளை புகுத்துகின்றன.

அதேசமயம், கிரெடிட் ஸ்கோர் 730-க்கு அதிகமாக வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான சிரமமும் இன்றி கடனை வழங்கவும் முடியும். நிதிப் பரிவர்த்தனை ஒழுக்கமாகவும், கடனை முறையாக திருப்பிச் செலுத்துபவர்களாக இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

730-க்கு மேல் சிபில் மதிப்பெண் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கடன் கேட்கும்போது விரைவாக பரிசிலீக்க முடியும், குறைந்த வட்டியும் வழங்கிடவும் வங்கிகளால் சாத்தியமாகும்.

இந்த புதிய விதியின் கீழ் கடன் வாங்குபவர் மாதத் தவணைகளை சரியான நேரத்தில் செலுத்துகிறாரா என்பதை மட்டும் வங்கிகள் கவனிக்காது.

மாறாக, கடன் பெறுவோர் நிதிச் சூழல், சொத்து விவரம், கடன் திருப்பிச் செலுத்திய கடந்த கால அறிக்கை, சிபில் ஸ்கோரில் ஏற்பட்ட மாறறங்கள், வருமான நிலைத்தன்மை, ஏற்கெனவே இருக்கும் கடன், எந்த மாதிரியான வேலையில் இருக்கிறார் என்பதையும் ஆய்வு செய்துதான் கடன் வழங்க பரிசீலிப்பர்.

இனி என்ன செய்ய வேண்டும்?

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்போது வங்கிகளில் கடன் பெறுவது கடினமாகும். ஆதலால், இப்போதே வாடிக்கையாளர்கள் தங்களை தயார் செய்து, தேவையான மாற்றங்களை செய்து ஆரோக்கியமான சிபில் ஸ்கோரை கொண்டு வர முயலலாம்.

ஏற்கெனவே வாங்கிய கடனுக்கான இஎம்ஐ-க்களை சரியான தேதிகளில் செலுத்த வேண்டும், கிரெடிட் கார்டு பில்களை சரியான காலக்கெடுவில் முடிக்க வேண்டும், கூடுதலாக கடன் வாங்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் கிரெடிட் ஸ்கோர் உயர்ந்து சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.

வாடிக்கையாளர்களுக்கு இனிவரும் காலங்களில் சிபில் ஸ்கோர்தான் மிகவும் சக்தியான சொத்துக்காக இருக்கும். அதை சிறப்பாக பராமரித்தால் கடன் பெறுவது வரும் காலத்தில் எளிதாகும், குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும், வழிமுறையும் இலகுவாகும்.

பாதுகாப்புக்கு புதிய விதி

ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக கடந்த வாரம் புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, வங்கிகள், வாடிக்கையாளர் ஒருவருக்கு கடன் வழங்கும்போது அவரின் விருப்பம் இன்றி, வலிந்து சில நிறுவனங்களின் காப்பீடு, பரஸ்பர நிதித் திட்டங்கள் ஆகியவற்றையும் விற்பனை செய்கின்றன. வாடிக்கையாளர்களும் தேவைக்கு கடன் கிடைக்கிறதே எனக் கருதி அதை ஏற்கின்றனர்.

ஆனால், ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதியின் கீழ் வாடிக்கையாளர் விருப்பம் இன்றி, ஒப்புதல் இன்றி இதுபோன்ற செயல்கள் வங்கிகள் ஈடுபட்டால் அவற்றின் மீது புகார் அளிக்க முடியும். தங்களிடம் வேண்டுமென்றே விற்பனை செய்த காப்பீடு, பரஸ்பர நிதித் திட்டங்களுக்கான பணத்தையும் வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறலாம். இந்த விதி 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த புதிய விதியின் மூலம் வங்கிகளின் தங்களின் ஏஜென்ட்கள் மூலம், ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசி காப்பீடு, பரஸ்பர நிதி, சேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றில் சேர்க்கக் கூற முடியாது. மேலும், சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் பரப்புரை செய்வது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்வது போன்றவற்றுக்கும் தடை செய்துள்ளது ரிசர்வ் வங்கி.

மிகக் குறிப்பாக வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் எனத் தெரிந்தால், சந்தேகப்பட்டால், தவறுதலாக விற்கப்பட்டதாக என உணர்ந்தால் வங்கி மீது ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கலாம். விற்கப்பட்ட அந்த சேவை, காப்பீடு ஆகியவற்றுக்கான பணத்தையும் வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறலாம்.

SCROLL FOR NEXT